2014-03-03 16:34:40

திருத்தந்தை பிரான்சிஸ் : இவ்வுலகச் செல்வங்களால் நிறைக்கப்பட வேண்டுமென்று விரும்பும் இதயத்தில் கடவுளுக்கு இடமில்லை


மார்ச்,03,2014. இவ்வுலகச் செல்வங்களால் முழுவதும் நிறைக்கப்படவேண்டுமென்று விரும்பும் இதயத்தில் கடவுளுக்கு இடமில்லை என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள், செல்வம் ஆகிய இருதலைவர்களுக்கு எவரும் ஒரே நேரத்தில் பணிவிடை செய்ய முடியாது என்று கூறினார்.
மனமாற்றத்தின் பயணமாகிய தவக்காலத்தை இவ்வாரத்தில் நாம் தொடங்குகிறோம் என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவின் உயிர்ப்பு நோக்கிச் செல்லும் இப்பயணத்தில் செபம், உண்ணாநோன்பு, கருணைச் செயல்கள் ஆகிய ஆயுதங்கள் மூலம் தீமையை எதிர்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இக்காலத்தில் அதிகத் தேவையில் இருப்போர் மற்றும் வன்முறை மோதல்களால் சோதிக்கப்படுவோருடன் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு சகோதரத்துவ தோழமையிலும் இறைவழிபாட்டு உணர்விலும் தவக்காலத்தைத் தொடங்குவோம் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பொருள்களால் ஆக்ரமிக்கப்பட வேண்டுமென ஏங்கும் இதயத்தில் கடவுளுக்கும், விசுவாசத்துக்கும் இடமேயில்லை என்று எச்சரித்த திருத்தந்தை, இதற்கு மாறாக, கடவுளுக்குரிய இடத்தைக் கொடுக்கும்போது, அவரது அன்பு, செல்வங்களைப் பிறரன்புப் பணிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவழிக்க நம்மைத் தூண்டும் என்றும் கூறினார்.
தனக்கென செல்வம் சேர்க்க முயற்சிக்கும்வரை அங்கு நீதி ஒருபோதும் இருக்காது என்றும், இறைவனின் பராமரிப்பில் நாம் நம்பிக்கை வைத்து இறையாட்சியை ஒன்றிணைந்து தேடும்பொழுது மாண்புடன் வாழ்வதற்கு எதுவுமே குறைவுபடாது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி









All the contents on this site are copyrighted ©.