2014-03-03 16:36:44

உக்ரைனில் அமைதி நிலவ திருத்தந்தை அழைப்பு


மார்ச்,03,2014. உக்ரைனில் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்கள் தங்களுக்கிடையே நிலவும் தவறான புரிந்துகொள்ளுதலை நீக்கி, அனைவரும் ஒன்றிணைந்து வருங்கால நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அமைதியான தீர்வு ஒன்றைக் கண்டடையுமாறு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் மழையையும் பொருட்படுத்தாது மூவேளை செப உரையைக் கேட்டுக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளிடம் உக்ரைன் நாட்டுக்காகச் செபிக்கக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உக்ரைன் நாட்டில் பதட்டம் நிறைந்த சூழல் அதிகரித்துக்கொண்டுவரும் இவ்வேளையில், அந்நாட்டில் உரையாடலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அனைத்துலக சமுதாயம் ஆதரவு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, இரஷ்யப் படைகள், உக்ரைன் பகுதியில் முற்றுகையிட்டுள்ளன எனவும், மேலும் இரண்டு இரஷ்ய போர்க்கப்பல்கள் உக்ரைன் பகுதிக்கு விரைந்துள்ளன எனவும், இதையடுத்து, உக்ரைன் மீது இரஷ்யா போர் தொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் இத்திங்கள் செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில், உக்ரைனில், இரஷ்ய படைகளின் அத்துமீறல் குறித்து அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமா, இன்னும், பிரிட்டன், ஜெர்மன் போன்ற நாடுகளின் பிரதமர்கள், போலந்து அரசுத்தலைவர் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.