2014-03-01 15:53:18

உக்ரைனின் கிரீமியா பகுதியில் அமைதிக்கு அழைப்பு, ஆயர்கள்


மார்ச்,01,2014. உக்ரைனின் கிரீமியா தன்னாட்சிப் பகுதியில், இரஷிய ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் ஆக்ரமிப்பு செய்துள்ளதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளவேளை, அப்பகுதியில் அமைதிக்காக அழைப்புவிடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
நூற்றுக்கணக்கான இரஷிய ஆதரவாளர்கள், இராணுவம் போன்று ஆயுதங்களுடன் கிரீமியா தன்னாட்சிப் பகுதியில் நுழைந்து அப்பகுதியின் விமான நிலையத்தை ஆக்ரமித்துள்ளதோடு அப்பகுதியிலுள்ள நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகக் கட்டடங்களை இவ்வியாழக்கிழமை கைப்பற்றியுள்ளனர். கிரீமியா தன்னாட்சிப் பகுதியையும் ஆக்ரமித்துள்ளனர்.
இந்தப் பதட்டநிலைகளையடுத்து உக்ரைன் கத்தோலிக்க இதழில் அமைதிக்கு அழைப்புவிடுத்துள்ள ஆயர்கள், இந்நெருக்கடிநிலை குறித்து ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அவை விவாதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஐரோப்பிய சமுதாய அவையுடன் உக்ரைனை இணைக்க மறுத்து இரஷியாவுடன் இணக்கமாகச் சென்ற முன்னாள் அரசுத்தலைவர் விக்டர் யானுகோவிச் பதவி விலக வேண்டும் எனக்கோரிய எதிர்ப்பாளர்களின் நெருக்கடி முற்றியதால் தலைநகர் கீவை விட்டு யானுகோவிச் கடந்த சனிக்கிழமை வெளியேறினார். இந்த நிலையில், புதிய சீர்திருத்தத் தலைவர்கள் மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிச் செல்வதால், இரஷியா எரிச்சலடைந்து உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.