2014-03-01 15:53:49

2020ல் சூரியனுக்கு ஆதித்யா செயற்கைக்கோள், இந்தியா


மார்ச்,01,2014. 2020ம் ஆண்டில் சூரியனுக்கு செயற்கைக்கோள் அனுப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னையில் தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் இராதாகிருஷ்ணன், வரும் 2017 முதல் 2020ம் ஆண்டிற்குள் ஆதித்யா என்ற பெயரில் சூரியனுக்கு செயற்கைக்கோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதற்கு முன்னதாக இரண்டாம் கட்டமாக சந்திராயன்-2 செயற்கை கோள் தயாரிக்கப்பட்டு அதனை நிலவில் தரையிறங்க வைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது எனவும் இராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
தொடர்ந்து 2020ம் ஆண்டிற்குள் மேலும் ஆறு முதல் பத்து டன் அளவு திறனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் தடுப்பது குறித்து கையாள்வதற்காக அனுப்பப்பட்ட கல்பனா, இன்சாட் 3-டி செயற்கைக்கோள் மிகவும் உதவிக்கரமாக செயல்பட்டு வருகிறது. அவை அனுப்பிய 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும் இராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள், திட்டமிட்டபடி சரியான பாதையி்ல செல்வதாகவும், அதன் மொத்த பயணத் தூரமான 680 மில்லியன் கி.மீ தூரத்தில் தற்போது மூன்றில் ஒருபங்கு தூரத்தைக் கடந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.