2014-02-28 16:44:29

அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெறும் பெருமளவான கைதுகள் குறித்து கிறிஸ்தவத் தலைவர்கள் நடவடிக்கை


பிப்.28,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டில் அதிக எண்ணிக்கையில் இடம்பெறும் கைதுகள் குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட பல கிறிஸ்தவத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் மனித மாண்பைப் பாதுகாப்பதற்கு அனைத்து மக்களுக்கும் அறநெறி சார்ந்த கடமை உள்ளது என்றும், பெருமளவில் இடம்பெறும் கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கிறிஸ்தவத் தலைவர்களின் அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டுச் சிறைகளில் 1980ம் ஆண்டில் 5 இலட்சம் கைதிகள் இருந்தனர், அவ்வெண்ணிக்கை 2010ம் ஆண்டில் 22 இலட்சத்துக்கு அதிகமாக இருந்தது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
அந்நாட்டின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் 1980ம் ஆண்டில் 41 ஆயிரம் போதைப்பொருள் குற்றவாளிகள் சிறைகளில் இருந்தனர், இக்குற்றவாளிக் கைதிகளின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் 5 இலட்சமாக உயர்ந்துள்ளது எனவும் அமெரிக்க கிறிஸ்தவத் தலைவர்களின் அறிக்கை கூறுகிறது

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.