2014-02-27 15:33:30

வெனெசுவேலா கலவரங்கள் குறித்து அந்நாட்டு ஆயர்கள் கவலை


பிப்.,27.2014. வெனெசுவேலா நாட்டின் கலவரங்களில் இறந்தவர்கள் அனைவரும், அரசைச் சார்ந்தவர்கள், அல்லது எதிர்தரப்பைச் சார்ந்தவர்கள் என்று எண்ணிப் பார்ப்பதைவிட அவர்கள் அனைவரும் பல்வேறு குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்று எண்ணிப் பார்ப்பது அவசியம் என்று வெனெசுவேலா ஆயர்கள் கூறியுள்ளனர்.
San Cristobal என்ற பகுதியில் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே உருவான மோதல்கள் கடந்த மூன்று வாரங்களாக வெனெசுவேலா நாட்டின் பல பகுதிகளிலும் பரவியுள்ளன.
இந்த மோதல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஆயர்கள், மாணவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடுவது அவர்களின் அடிப்படை உரிமை என்றாலும், தங்கள் கருத்துக்களை வெளியிடும் முறைகளில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மோதல்களில் முதன் முதலாகப் பலியாவது உண்மைகளே என்பதை வலியுறுத்திக் கூறியுள்ள ஆயர்கள், அரசும், மாணவர் அமைப்புகளும், மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் உரையாடலை மேற்கொள்வது ஒன்றே தகுந்த தீர்வு என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.