2014-02-27 15:32:33

முரண்பட்ட வாழ்வு நடத்தும் கிறிஸ்தவர், மற்றவர்களைப் பாவத்தில் விழச் செய்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்


பிப்.27,2014. "முரண்பட்ட வாழ்வு நடத்தும் கிறிஸ்தவர், மற்றவர்களைப் பாவத்தில் விழச் செய்கிறார்; பிறரைப் பாவத்தில் விழச் செய்வது, கொலை செய்வதற்குச் சமம்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை மறையுரையில் கூறினார்.
புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை ஆற்றியத் திருப்பலியில், 'உறுதிப் பூசுதல்' என்ற அருள் சாதனம் வழியே ஒவ்வொரு கிறிஸ்தவரும் பெறும் அழைப்பை அடிப்படையாகக் கொண்டு தன் மறையுரையை வழங்கினார்.
“இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே! உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்: அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல், படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது” என்று திருத்தூதர் யாக்கோபு கூறும் வார்த்தைகளைக் கேட்கும் ஒருவர், கம்யுனிசக் கொள்கை உடைய ஒருவர் பேசியிருப்பதைப் போல் உணரக்கூடும். ஆயினும், இது இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆண்டவரின் அருள்வாக்கு என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
மற்றவர்களைப் பாவத்தில் விழச் செய்பவர்களைக் குறித்து இயேசு கூறும் வார்த்தைகளும் இன்றைய நற்செய்தியில் ஆணித்தரமாக ஒலிக்கின்றன என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, இயேசுவின் படிப்பினைகளுக்கு முரண்பட்டு வாழும் கிறிஸ்தவர்கள், திருஅவைக்கும் பெரும் பாதிப்பை உருவாக்குகின்றனர் என்று கூறினார்.
நமது நம்பிக்கையும், வாழும் விதமும் ஒன்றுக்கொன்று முரணாக மாறாமல் இருப்பதற்கு, நமக்கு செபம் மிகவும் முக்கியமான தேவை என்பதை திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
நாம் அனைவருமே பாவிகள், தவறக் கூடியவர்கள், எனவே, இறைவனின் இரக்கத்தையும், மன்னிப்பையும் நாட வேண்டியவர்கள்; மன்னிப்பதில் இறைவன் என்றும் மனம் தளர்வதில்லை என்ற ஆறுதலான வார்த்தைகளுடன் திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.