2014-02-27 13:37:51

புனிதரும் மனிதரே : மனந்திருந்தினால் யாரும் புனிதராகலாம் - புனித கொர்த்தோனா மார்கிரேட்(St. Margaret of Cortona)


குடும்பத்தில் கிடைக்க வேண்டிய அன்பு, குறிப்பாக, தாயன்பு கிடைக்கவில்லையெனில் பல குழந்தைகள் எதிர்மறைப் பண்புகளை அதிகம் கொண்டிருப்பதைப் பரவலாகக் காண முடிகின்றது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது கொர்த்தோனா நகர் மார்கிரேட்டின் வாழ்வு. இத்தாலியின் பெருஜியா நகருக்கு அருகிலுள்ள லவியானோவில் விவசாயத் தொழில் செய்யும் பெற்றோருக்கு 1247ம் ஆண்டில் பிறந்தவர் மார்கிரேட். சிறுமி மார்கிரேட்டுக்கு ஏழு வயது நடந்தபோது தாய் இறந்துவிட்டார். இவரது தந்தை மறுதிருமணம் செய்தார். மார்கிரேட்டுக்கும், அவரது மாற்றாந்தாய்க்கும் ஒத்துப்போகவே இல்லை. குடும்பத்தின் அன்பு கிடைக்காமல் வளர்ந்த மார்கிரேட் முரட்டுத்தனத்துடனும், அலட்சியப்போக்கிலும் வளர்ந்தார். 17வது வயதில் லவியானோ பிரபுவின் மகனோடு காதல் ஏற்பட்டு அந்தப் பிரபுவின் அரண்மனையில் Montepulcianoவுக்கு அருகில், அந்த இளைஞரின் மனைவியாக இல்லாமல் தவறான உறவில் வாழ்ந்து வந்தார் மார்கிரேட். மார்கிரேட்டுக்கு ஒரு மகனும் பிறந்தான். எப்படியும் தன்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்த அந்த பணக்கார இளைஞனை நம்பியிருந்த மார்கிரேட்டின் வாழ்வில் பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஒருநாள் பயணம் சென்ற மார்கிரேட்டின் காதலன் திரும்பி வரவே இல்லை. அவரைத் தேடிச் சென்றபோது காட்டில் அவர் கொலையுண்டு கிடந்ததைக் கண்டார். இது மார்கிரேட்டின் வாழ்வைப் புரட்டிப்போட்டது. தனது மகனுடன் தந்தையின் வீடு சென்றார். அங்கு அவ்விருவரும் புறக்கணிக்கப்பட்டனர். எனவே கொர்த்தோனா நகரிலிருந்த பிரான்சிஸ்கன் துறவிகள் இல்லத்தில் தனது மகனுடன் தஞ்சம் புகுந்தார் மார்கிரேட். முந்தைய தவறான வாழ்வுக்குப் பரிகாரமாக மூன்றாண்டுகள் கடும் தப வாழ்வு வாழ்ந்த பின்னர் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் 1277ம் ஆண்டில் சேர்ந்தார் மார்கிரேட். இவர் செபத்திலும் தியானத்திலும் தபத்திலும் ஆழ்ந்திருந்தார். ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் சேவையாற்றினார். 1297ம் ஆண்டு பிப்ரவர் 22ம் நாள் புனிதராக இறந்தார் மார்கிரேட்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.