2014-02-26 16:36:32

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருது விலகுவது என்ற முடிவை, மிகவும் தெளிவான மனநிலையில் எடுத்தேன்


பிப்.26,2014. திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருது விலகுவது என்ற முடிவை, மிகவும் தெளிவான மனநிலையில் தான் எடுத்ததாகவும், அந்த முடிவைக் குறித்து ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகும் கருத்துக்கள் அர்த்தமற்றவை என்றும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதியன்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், புனித பேதுருவின் வழித்தோன்றல் என்ற தன் உயர்நிலையைத் துறப்பதாக அறிவித்த அந்த முடிவின் ஓராண்டு நிறைவையொட்டி, அவர் வழங்கியுள்ள கருத்துக்களை, ‘La Stampa’ என்ற இத்தாலிய நாளிதழ், பிப்ரவரி 26, இப்புதனன்று வெளியிட்டுள்ளது.
இந்த ஓராண்டு நிறைவையொட்டி, ஊடகங்களில் வெளியான பல்வேறு கருத்துக்களுக்குப் பதிலிறுக்கும் வண்ணம், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஒரு சில எண்ணங்களைத் தன் கைப்பட எழுதி, ‘La Stampa’ நாளிதழுக்கு அனுப்பிவைத்தார்.
தனக்கு அடுத்ததாகத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தனக்கு நலம் மிகுந்த உறவு நிலவுவதாகவும், ஒய்வு பெற்றுள்ள நிலையில், திருஅவைக்காக செபிப்பதே தன் முக்கிய பணியென்றும் முன்னாள் திருத்தந்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது தான் அணிந்துவரும் வெள்ளை உடுப்பைக் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டுள்ள முன்னாள் திருத்தந்தை, தற்போதையத் திருத்தந்தை அணியும் உடைக்கும், தான் அணியும் உடைக்கும் தெளிவான வேறுபாடுகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.