2014-02-26 16:38:10

திருத்தந்தை பிரான்சிஸ், கொரியாவுக்கு வருகை தருவது, தலத்திருஅவைக்குப் புத்துணர்வைக் கொணரும் - கர்தினால் Yeom Soo-jung


பிப்.26,2014. உலகின் பல நாடுகளிலிருந்தும், கொரியாவுக்கு வந்து பணியாற்றிய மறைப் பணியாளர்களின் தியாகம் நிறைந்த உழைப்பிற்கு, கொரியத் தலத்திருஅவை தன் நன்றியை, பணிகள் வழியே வெளிப்படுத்தும் தருணம் வந்துள்ளது என்று கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள் கூறினார்.
பிப்ரவரி 22, கடந்த சனிக்கிழமையன்று, திருத்தத்தை பிரான்சிஸ் அவர்கள் கர்தினால்களாக உயர்த்திய 19 பேரில் ஒருவரான Seoul பேராயர், கர்தினால் Yeom Soo-jung அவர்கள், தன் புதிய பொறுப்பைக் குறித்து கொரிய செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைக் கர்தினாலாக உயர்த்தியத் திருச்சடங்கில், சமாதான வாழ்த்துப் பரிமாற்றம் செய்தபோது, தான் கொரியாவை மிகுந்த அன்புகூர்வதாகத் தெரிவித்தார் என்றும், கொரிய மக்கள், திருத்தந்தையின் மீது ஆழ்ந்த அன்பு கொண்டுள்ளனர் என்று தான் பதிலுக்குக் கூறியதாகவும் கர்தினால் Yeom Soo-jung அவர்கள் குறிப்பிட்டுப் பேசினார்.
ஆசிய இளையோர் நாள் கொண்டாட்டங்களின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரியாவுக்கு வருகை தருவது, தங்கள் தலத்திருஅவைக்குப் பெரிதும் புத்துணர்வைக் கொணரும் ஒரு நிகழ்வாக அமையும் என்று கர்தினால் Yeom Soo-jung அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.