2014-02-26 16:41:50

இந்தியாவில், குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் மத விடுதலையை உறுதி செய்யும் நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொள்ளும்


பிப்.26,2014. மனித உரிமைகள் குறித்த அகில உலக ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் மத விடுதலை எனும் மனித உரிமையை இந்தியாவிலும், குறிப்பாக, குஜராத் மாநிலத்திலும் உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள விருப்பதாக, ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இம்மாதம் 23, 24 ஆகிய இரு நாட்கள் கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்ட ஐ.நா.வின் சிறப்பு அதிகாரி, Heiner Bielefeldt அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.
கண்காணிப்புக் குழுவின் அதிகாரி Bielefeldt அவர்கள், இவ்விதம் கூறியுள்ளது, குஜராத்தில் நிகழ்ந்துள்ள கடந்த காலப் படுகொலைகளை மூடியிருந்த மௌனத் திரையை விளக்குவதாக உள்ளது என்று, அம்மாநிலத்தில் செயலாற்றும் Prashant என்ற மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர், இயேசு சபை அருள்பணியாளர் Cedric Prakash அவர்கள் கூறினார்.
குஜராத் மாநிலத்தில், 1998ம் ஆண்டு முதல், கிறிஸ்தவர்கள் மீது இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் குறித்தும், 2002ம் ஆண்டு, இஸ்லாமியர்கள் மீது நடந்த படுகொலைகள் குறித்தும் ஐ.நா. அதிகாரி Bielefeldt அவர்கள், குஜராத் மக்களின் பல தரப்பினரை சந்தித்து விசாரித்தார் என்பதையும் அருள்பணியாளர் Cedric Prakash அவர்கள் எடுத்துரைத்தார்.
குஜராத் மாநிலத்தில், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள், இந்து மதத்திற்கு மீண்டும் மதம் மாறுவதற்கு, அடிப்படை வாதக் குழுக்கள் செயல்படுத்திவரும் திட்டங்களும், முயற்சிகளும் மாநில அரசின் ஆதரவைப் பெற்றுள்ளது என்றும், சிறுபான்மை மதங்களுக்கு எதிரான குஜராத் அரசின் நடவடிக்கைகளுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்றும் கூறினார் இயேசு சபை அருள்பணியாளர் Cedric Prakash.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.