2014-02-26 15:13:57

அமைதி ஆர்வலர்கள் –1908ல் நொபெல் அமைதி விருது பெற்றவர்கள்


பிப்.26,2014. சுவீடன் நாட்டு Klas Pontus Arnoldson, டென்மார்க் நாட்டு Fredrik Bajer ஆகிய இருவருக்கும் 1908ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. சுவீடன் நாட்டு பத்திரிகையாளரும், ஸ்காண்டிநேவியாவின் ஒற்றுமைக்குப் பரிந்துரைத்தவருமாகிய Klas Pontus Arnoldson, ஒரு சாதாரண குடும்பத்தில் Göteborgல் 1844ம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ஒரு காவற்பணியாளர். இவர் தனது சொந்த ஊரில் அரசுப் பள்ளியில் கல்வி கற்றுவந்தார். இவரது தந்தை 1860ம் ஆண்டில் இறந்ததால், குடும்பத்தின் பொருளாதாரம் காரணமாக, இவர் தனது 16வது வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்தினார். இவர் தனது 21வது வயதுவரை இரயில் தண்டவாளம் அமைக்கும் பணியில் முதலில் எழுத்தாளராகவும், பின்னர் பத்து ஆண்டுகளுக்கு Jonsered, Älgarås, Tumba ஆகிய இடங்களில் இரயில்நிலைய மேற்பார்வையாளருமாக வேலை செய்தார். இந்த ஆண்டுகளில் Arnoldson தனது படிப்பைத் தொடர்ந்தார். வரலாறு, மதம், மெய்யியல் ஆகியவை பற்றி அதிகமாக வாசித்தார். அக்காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை, சிறப்பாக, டென்மார்க், ஆஸ்ட்ரியா, புருசியா ஆகியவற்றுக்கிடையே 1864ம் ஆண்டில் நடந்த போரையும், 1870, 1871 ஆகிய ஆண்டுகளில் பிரான்சுக்கும் புருசியாவுக்கும் இடையே நடந்த போரையும் கவனித்தார். அச்சமயங்களில் இவரின் எழுத்துக்களில் மதம், அரசியல், அமைதி ஆகிய கருத்துக்கள் அதிகமாக வெளிப்பட்டன.
Arnoldson விடுதலை இறையியலாளர். 19ம் நூற்றாண்டில் பிரித்தானியாவிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுஇங்கிலாந்து பகுதியிலும் எழுந்த சமயத் தீவிரவாதக் கோட்பாடுகள் குறித்து கவலையடைந்தார். உண்மை, சகிப்புத்தன்மை, மனச்சான்றின் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஆகியவை பற்றிய கருத்துக்களை, நார்வே டெய்லி என்ற தினத்தாளில்(Nordiska Dagbladet) பிரசுரித்தார். உண்மையைத் தேடுபவர் என்ற மாத இதழிலும்(Sanningssökaren), நூல்களிலும், துண்டுப்பிரசுரங்களிலும் நடைமுறை கிறிஸ்தவம் பற்றி எழுதினார். Arnoldson, அரசியல் மெய்யியலிலும் சுதந்தரமாகச் சிந்திக்கக் கூடியவர். சனநாயகம், தனிமனிதக்கோட்பாடு ஆகியவற்றில் நடைமுறையில் இருக்க வேண்டியதை வலியுறுத்தினார். 1882 முதல் 1887 வரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்துக்கு வெளியே அமைதிக்கான பணிகளைத் தீவிரமாக ஆற்றினார். 1883ல், சுவீடன் அமைதி மற்றும் போர் ஒழிப்புக் கழகம் உருவாக இவரும் ஒரு காரணம். அமைதி பற்றிய செய்திகளையும் தகவல்களையும் வெளியிடும் த டைம்ஸ் இதழின் செயலராகவும் இருந்தார் Arnoldson.
நார்வேக்கும் சுவீடனுக்கும் இடையே 1895ம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகள் காரணமாக, ஒன்றிணைந்திருந்த நாடுகள் பிரிந்தன. இதில் Arnoldson நார்வே மீது இரக்கம் காட்டினார். 1908ம் ஆண்டில் Arnoldsonக்கு நொபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்டபோது சில சுவீடன் தினத்தாள்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இது சுவீடனுக்கு அவமானம் என்று கூறின. இதற்குப் பதிலளித்த நார்வே அமைதி விருதுக்குழுவின் தலைவர், நார்வேயும் சுவீடனும் ஒன்றாக இணைந்திருந்தபோது அந்த நாடாளுமன்றத்தின் சுவீடன் குழுவே Arnoldson பெயரை நொபெல் அமைதி விருதுக்குப் பரிந்துரைத்ததாகத் அறிவித்தார். Arnoldson, 1916ல் மாரடைப்பால் தனது 72வது வயதில் இறந்தார்.
1908ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற மற்றொருவரான Fredrik Bajer, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஓர் அமைதி ஆர்வலர். Alfred Beyer என்ற மதபோதகரின் மகனாகிய Fredrik Bajer, 1860ம் ஆண்டில் இராணுவப் பள்ளியில் உயர் கல்வி பயின்றார். 1864ம் ஆண்டில் புருசியாவுக்கும் ஆஸ்ட்ரியாவுக்கும் இடையே நடந்த போரில் இராணுவத்தை முன்னின்று நடத்தி திறமையாகப் போரிட்டார். அதனால் இராணுவத்தில் உயர் பதவியையும் பெற்றார். எனினும், இந்தப் போரின் இறுதியில் இராணுவத்தில் இடம்பெற்ற ஆள்குறைப்பில் Fredrik Bajer நீக்கப்பட்டார். இதற்கு முன்னரே தனது இராணுவ வாழ்விலிருந்து விலகி மெய்யியல் வாழ்வில் வளருவதற்குச் சிந்தித்து வந்தார் Fredrik Bajer. இவர் தனது 28க்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் தனது பிற்காலத்திய வாழ்வுக்கு அடித்தளமிட்டார். பிரான்ஸ், நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளின் மொழிகளைக் கற்றார். 1872ல் அரசியலில் நுழைந்தார் இவர். முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட Fredrik Bajer, அனைத்துலக அமைதி, டென்மார்க் நாட்டின் நடுநிலைமை, ஸ்காண்டிநேவிய ஒன்றிப்பு, பெண்ணுரிமை, கல்வி போன்றவற்றுக்காகச் சிறப்பாக உழைத்தார். டென்மார்க்கில் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். பெண்களுக்குச் சமத்துவம், குறிப்பாக பொருளாதார விவகாரங்களில் சமத்துவத்துக்கான சட்டத்துக்கு ஆதரவளித்தார் Fredrik Bajer.
1870ல் நார்டிக் சுதந்திர நாடுகளின் கழகத்தை ஆரம்பித்தார் Fredrik Bajer. தனது பன்மொழிப் புலமையினால் அமைதி இயக்கங்களை நடத்தினார். அனைத்துலக அமைதி இயக்கத்தில் முக்கிய நபராக உருவெடுத்தார். Fredrik Bajer, பல அமைதி இயக்கங்களை வழிநடத்தி உலக அமைதிக்காக ஆற்றிய சேவைக்காக நொபெல் அமைதி விருது இவருக்கு 1908ல் வழங்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.