2014-02-25 15:31:11

பொருளாதார விவகாரங்களை மேற்பார்வையிட புதிய வத்திக்கான் செயலகத்தை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை


பிப்.25,2014. திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நாட்டின் அனைத்துப் பொருளாதார மற்றும் நிதி நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதற்கென புதிய பொருளாதாரச் செயலகத்தை இத்திங்களன்று உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தப் புதிய பொருளாதாரச் செயலகம் நிதிசார்ந்த திட்டங்கள், வரவுசெலவு, நிதி அறிக்கை தயாரித்தல் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கும். இந்தச் செயலகம் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எட்டு கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் 7 பொதுநிலையினரைக் கொண்ட 15 பேர் அடங்கிய ஒரு புதிய குழுவினால் மேற்பார்வையிடப்படும்.
புதிய பொருளாதாரச் செயலகத்தின் தலைவராக ஆஸ்திரேலியாவின் சிட்னி கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்செயலகத்தின் பொதுச் செயலர், இதன் அன்றாட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்களுக்கு வழங்குவார்.
நம்பிக்கைக்கு உரியவரும், அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர்(Fidelis dispensator et prudens லூக்.12,42) என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று வெளியிட்ட தனது சொந்த முயற்சியினால்(Motu proprio) என்ற அறிக்கையில் இந்தப் புதிய பொருளாதாரச் செயலகம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல், வத்திக்கானுக்குச் சொத்துக்கள் வாங்குதல் போன்றவைகளை, தற்போது செய்துவரும் APSA என்ற அப்போஸ்தலிக்கப் பீடத்தின் சொத்து நிர்வாகத் துறை, வத்திக்கானின் மத்திய வங்கியாக, தனது பணிகளைத் தொடர்ந்து ஆற்றும் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.