2014-02-25 15:30:57

திருத்தந்தை : போர்கள், சிறாரை அகதிகள் முகாம்களில் பசியால் வாடவைக்கின்றன


பிப்.25,2014. அகதிகள் முகாம்களில் சிறார் பசியோடு வாடும்வேளை, ஆயுதங்களை உற்பத்தி செயபவர்களும், அவற்றை விற்பவர்களும் சமுதாய அரங்குகளில் ஆடம்பர களியாட்ட விருந்துகளை நடத்துகின்றனர் என இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, தனது மறையுரை முழுவதிலும் அமைதிக்காக உருக்கமாக அழைப்பு விடுத்தார், அதோடு, உலகில் இடம்பெறும் சண்டைக்கு எதிராக, கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.
உங்களிடையே சண்டை, சச்சரவுகள் எங்கிருந்து வருகின்றன என்று இந்நாளைய முதல் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கேள்வி கேட்டிருப்பதையும், தங்களில் யார் பெரியவர் என இயேசுவின் சீடர்களுக்குள் எழுந்த வாக்குவாதங்களைச் சொல்லும் நற்செய்தி வாசகத்தையும் மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சண்டைகளையும் வெறுப்பையும், பகைமையையும் சந்தையில் வாங்க முடியாது, அவை உலகப் பொருள்களுக்கான நமது சிற்றின்ப நாட்டங்களில், நம் இதயங்களில் தொடங்குகின்றன என்று கூறினார்.
உலகில் அதிகரித்துவரும் சண்டைகள், மோதல்கள், சச்சரவுகள், மரணங்கள் ஆகியவை பற்றி ஒவ்வொரு நாளும் நாம் கேட்டுவருகிறோம், இன்று நடைபெறும் சண்டைகளைப் பட்டியலிட முயற்சித்தால் பல பக்கங்கள் தேவைப்படும் என்றும் உரைத்த திருத்தந்தை, பெரிய போர்கள் தவிர எல்லா இடங்களிலும் சிறிய சண்டைகளும் இடம்பெறுகின்றன, ஒவ்வொருவரும் தங்களது சொந்த ஆதாயங்களைப் பாதுகாப்பதற்காக ஒருவர் ஒருவரைக் கொலை செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
கடவுளிடமிருந்து நம்மை விலக்கி வைக்கும் சண்டை உணர்வு நம் குடும்பங்களிலும்கூட இருக்கின்றன என்றும், தந்தையும் தாயும் அமைதிப் பாதையைக் காண முடியாமல் சண்டையைத் தெரிவுசெய்து அதில் வழக்கறிஞர்களை ஈடுபடுத்துகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, குடும்பங்களிலும், சமூகங்களிலும் எல்லாவிடங்களிலும் சண்டை தொடர்கின்றது என்ற கவலையையும் தெரிவித்தார்.
சண்டை குறித்த செய்திகளுக்கு நாம் பழக்கப்பட்டவர்களாக மாறாதிருப்பதற்கு ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம் எனவும் திருத்தந்தை இறுதியில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.