2014-02-25 15:31:33

இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை: நவி பிள்ளை அறிக்கை


பிப்.25,2014. இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது காணாமற்போனவர்கள் குறித்த அரசின் விசாரணைகள் முடிவுறாத நிலையில் உள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்களும், உள்ளூர் தன்னார்வப் பணியாளர்களும் கூறுகின்றனர்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் 1990க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் கடத்தப்பட்டவர்கள் மற்றும் கட்டாயமாகக் காணாமற்போனவர்கள் குறித்து அரசின் புலனாய்வுக் குழு நடத்திய முதல்கட்ட விசாரணைகள் இன்னும் முடிவுறாத நிலையில் உள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம், இந்தப் புலனாய்வுக் குழுவின் விசாரணையை மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது இவ்வாண்டு ஆகஸ்ட் 12 வரை அரசுத்தலைவர் மகிந்த இராஷபக்ஷ நீட்டித்துள்ளார்.
இதுவரை இந்தப் புலனாய்வுக் குழுவிடம்,16 ஆயிரம் புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
மேலும், இலங்கையில் நடந்து முடிந்த போரின் இறுதிக்கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் பெருமளவான மனித உரிமை மீறல்கள் குறித்து நியாயமான விசாரணையை நடத்த இலங்கை தவறிவிட்டது என்று ஐநா மனித உரிமைகள் அவைத் தலைவர் நவி பிள்ளை அவர்களின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
இந்த அறிக்கை அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.