2014-02-24 16:55:07

திருத்தந்தை பிரான்சிஸ் - புனிதப் பாதையில் வழிநடக்குமாறு திருஅவைத் தலைவர்களுக்கு அழைப்பு


பிப்.24,2014. அரசவைக்குள் அல்ல, மாறாக, திருஅவைக்குள் நுழைந்துள்ள புதிய கர்தினால்கள், நற்செய்தியின் வழியில் பேறுபெற்றோரின் செயல்பாட்டுடனும், புனிதத்துவப் பாதையிலும் நடைபோடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் புதிய கர்தினால்களுடன் இஞ்ஞாயிறன்று காலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை, சமூக அவைக்குள் இடம்பெறும் புறம்பேசுதல், பாகுபாடு பார்த்தல், வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் உதவுதல் போன்ற தவறானச் செயல்பாடுகளைக் கைவிட்டு, திருஅவைக்கு உரிய புனிதப் பாதையில் வழிநடக்குமாறு திருஅவைத் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.
தம்மையே முற்றிலுமாக கையளிப்பவர்களாக, பகைவர்களையும் அன்புகூர்பவர்களாக, நம்மைத் தூற்றுபவர்களையும் ஆசீர்வதிப்பவர்களாக, தம்மையே முன்னிலைப் படுத்தாதவர்களாக, எளிமையானவர்களாக, நாம் அனுபவித்த அவமானங்களை மறக்கும் சக்தி கொண்டவர்களாக, தன்னையே பலியாக்கிய இயேசுவின் உணர்வுடன் வழிநடத்தப்படுவோமாக என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கர்தினால்களிடம் கேட்டுக்கொண்டார்.
புனிதத்துவம் என்பது, உலகின் மீட்புக்கு இன்றியமையாத ஒன்று என்பதையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, இறைவனின் திருக்கோவில் புனிதமானது, அந்தத் திருக்கோவிலே நீங்கள் என்று புனித பவுல் அடியார் கூறிய வார்த்தைகளையும் மேற்கோள் காட்டி, ஒவ்வொருவரும் புனிதராக வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
திருக்கோவிலாக இருக்கும் நாம், அன்பெனும் வழிபாட்டை நிறைவேற்றவேண்டும், அது, அயலாருக்கு நாம் ஆற்றும் பணிகளையும் உள்ளடக்கியது என்று மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.