2014-02-22 15:01:35

பொதுக்காலம் 7ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 நெடுவழிப்பாதையின் ஓரமாய் இருந்த 'ஓட்டலு’க்கு முன்பாக ஒருவர் தன் லாரியை நிறுத்திவிட்டு, உள்ளே சாப்பிடச் சென்றார். அவர் கேட்ட உணவை, பரிமாறுபவர் கொண்டுவந்து வைத்தார். அப்போது, ‘மோட்டார் சைக்கிள்’களில் வந்த ஆறு, அல்லது ஏழுபேர், அவரது உணவுத் தட்டைப் பறித்து, அட்டகாசமான வெற்றிச் சிரிப்புடன், தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். எதுவும் பேசாத லாரி ஓட்டுனர், தன் உணவுக்குரியத் தொகையைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், "அவனுக்குப் பேசத்தெரியாதுன்னு நினைக்கிறேன். ஒரு வார்த்தையும் சொல்லாமல் ஓடிட்டான்" என்று சொல்லி உரக்கச் சிரித்தார். அந்தக் கும்பலைச் சார்ந்த மற்றொருவர், "அவனுக்குச் சண்டைபோடவும் தெரியாதுன்னு நினைக்கிறேன். கையை ஓங்காமலேயே ஓடிட்டான்" என்று கூறி, அவரும் பலமாகச் சிரித்தார். அப்போது ஓட்டலில் பரிமாறிக் கொண்டிருந்த ஒருவர் அவர்களிடம் வந்து, "அவருக்கு லாரி ஒட்டவும் தெரியாதுன்னு நினைக்கிறேன். நீங்க நிறுத்தி வச்சிருந்த மோட்டார் சைக்கிள் எல்லாத்தையும் லாரி ஏத்தி நொறுக்கிட்டுப் போயிட்டார்" என்று சொன்னார்.
இந்தக் கதையைக் கேட்கும்போது, நம் மனங்களில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி உண்டாவதை உணர்கிறோம். இவ்விதமான காட்சிகள் நம் திரைப்படங்களில் அடிக்கடி வந்து நம் கைத்தட்டைப் பெற்றுள்ளன. அந்த லாரி ஓட்டுனர், மோட்டார் சைக்கிள் ‘தாதா’க்களுக்கு நல்ல பாடம் சொல்லித்தந்தார் என்ற மகிழ்ச்சியே கைத்தட்டலாக மாறுகிறது. 'பழிக்குப் பழி'யைப் பலவழிகளில் சொல்லும் கதைகளை, காட்சிகளை நாம் இரசிக்கிறோம்.
'பழிக்குப் பழி', 'பதிலுக்குப் பதில்', 'பல்லுக்குப் பல்' 'கண்ணுக்குக் கண்' ... இவை எதுவுமே கிறிஸ்தவ வாழ்வு முறை அல்ல என்பதை இன்றைய நற்செய்தி, ஆழமாய், மிக, மிக ஆழமாய் சொல்லித்தருகிறது. இந்தக் கண்ணியமான, அதேநேரம், கடினமானப் பாடத்தைக் கற்றுக்கொள்ள இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் சிறப்பான ஒளியைத் தரவேண்டுமென்ற வேண்டுதலுடன் நம் சிந்தனைகளை இன்று துவக்குவோம்.

'காந்தி' என்ற திரைப்படத்தை நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். அத்திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது: காந்தியும் அவரது நண்பரான கிறிஸ்தவப் பணியாளர் சார்லி ஆண்ட்ரூஸும் ஒரு நாள் வீதியில் நடந்து செல்லும்போது, ஒரு ரௌடி கும்பல் திடீரென அவர்களை வழிமறைத்து நிற்கும். அவர்களைக் கண்டதும், "வாருங்கள், நாம் வேறுவழியில் சென்றுவிடுவோம்" என்று சார்லி, காந்தியிடம் சொல்வார். காந்தி அவரிடம், "உன் எதிரி உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தைக் காட்டவேண்டுமென்று இயேசு சொல்லவில்லையா?" என்று கேட்பார். அதற்கு சார்லி, "சொன்னார்... ஆனால், அதை ஓர் உருவகமாய்ச் சொன்னார்." என்று பூசி மழுப்புவார். காந்தி அவரிடம், "இயேசு அப்படிச் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. எதிராளிகள் முன்னிலையில் நாம் துணிவுடன் நிற்கவேண்டும். அவர்கள் எத்தனை முறை அடித்தாலும், திருப்பி அடிக்கவோ, திரும்பி ஓடவோ மறுத்து, துணிவுடன் நிற்கவேண்டும் என்பதையே இயேசு சொல்லித்தந்தார் என்று நினைக்கிறேன்" என்று சொல்வார்.
இக்காட்சியில், காந்தியடிகள் கூறும் வார்த்தைகள், ஒன்று 'ஹீரோ’த்தனமாகத் தெரியலாம், அல்லது பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம். நம் திரைப்படங்களில் வரும் ஹீரோக்களும் காந்தியடிகள் சொல்வதுபோல் அடிகளைத் தாங்கிக் கொள்வார்கள்... ஆனால், சிறிது நேரம் கழித்து, தாங்கள் பெற்ற அடிக்கு பல மடங்கு திருப்பித் தருவார்கள். நம் கைத்தட்டலைப் பெறுவார்கள்.

‘மறுகன்னத்தைக் காட்டுங்கள்’ என்று சொன்ன இயேசுவின் கூற்று துணிச்சலா? மதியீனமா? புனிதமா? என்ற கேள்விகள், இயேசுவின் காலத்திலிருந்து நம்மைத் தொடர்கின்றன. இன்றைய நற்செய்தி இக்கேள்வியை, இந்த விவாதத்தை மீண்டும் கிளறிவிடுகிறது. இயேசுவின் கூற்றுகளை, வெறும் மேற்கோள்களாகக் காட்டுவது எளிது. ஆனால், அவற்றை இயேசு கூறிய சந்தர்ப்பச் சூழ்நிலைகளுடன் பார்க்கும்போதுதான் அவரது வார்த்தைகளின் பொருளை ஓரளவாகிலும் புரிந்துகொள்ள முடியும்.
மறுகன்னத்தைக் காட்டுங்கள் என்று கூறிய இயேசு, தலைமைக் குருவின் காவலர் தன்னை அறைந்தபோது, மறுகன்னத்தைக் காட்டுவதற்குப் பதில், "ஏன் என்னை அடிக்கிறீர்?" என்று கேள்வி கேட்டார் (யோவான் 18: 22-23). அவர் போதித்தது ஒன்று, அவர் செய்தது ஒன்று என்று அவசர முடிவுகள் எடுப்பதற்குப் பதில், இயேசுவின் கூற்றுகளை, சூழ்நிலையுடன் பார்ப்பது நல்லது.

தலைமைக் குருவுக்கு முன் விசாரணை நடந்தபோது, உண்மைகள் புதைக்கப்படக் கூடாது என்ற வேட்கையில் இயேசு பேசிக்கொண்டிருந்தார். அவர் கூறிய சங்கடமான உண்மைகளை மௌனமாக்க காவலர் அறைந்தார். அந்தச் சூழலில் உண்மை வெளிவர வேண்டும் என்பது முக்கியம் என்று இயேசு உணர்ந்ததால், தன்னை மௌனமாக்க நினைத்த காவலரை எதிர்த்து கேள்வி கேட்டார்.
தன்னை அறைந்தவருக்கு மறுகன்னத்தைக் காட்டாமல் கேள்வி எழுப்பிய இயேசு, இன்றைய நற்செய்தியில், மறுகன்னத்தைக் காட்டச் சொல்கிறார்; உள்ளாடையைப் பறித்துச் செல்பவருக்கு மேலாடையையும் அவர் கேட்காமலேயே கொடுக்கச் சொல்கிறார்; நம்மை வலுக்கட்டாயமாக ஒரு மைல் தூரம் இழுத்துச் செல்பவருடன் இரண்டு மைல் தூரம் நடக்கச் சொல்கிறார். இவை அனைத்திற்கும் இயேசு சொல்லும் ஒரு முக்கியக் காரணம் இன்றைய நற்செய்தியில் தரப்பட்டுள்ளது. இப்பகுதியை மலைப்பொழிவின் உயிர்நாடி என்று விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
மத்தேயு 5 : 43-45
“‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக, பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

"மறுகன்னம்" (The Other Cheek) என்ற வார்த்தையைச் சுற்றி, நல்ல விளக்கங்கள், குதர்க்கமான விளக்கங்கள், விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. கண்ணுக்குக் கண்... பல்லுக்குப் பல் என்பது பழையச் சட்டம். "கண்ணுக்குக் கண்" என்று உலகத்தில் எல்லாரும் பழிவாங்கும் படலத்தில் இறங்கினால், உலகமே குருடாகிப்போகும் என்று காந்தியடிகள் சொன்னார். பழிக்குப் பழி வேண்டாம். சரி... அதற்கு அடுத்த நிலையை நாம் சிந்திக்கலாம் அல்லவா? காந்தியின் நண்பர் சார்லி சொன்னதுபோல், அல்லது நமது தமிழ் பழமொழி சொல்லித் தருவதுபோல், "துஷ்டனைக் கண்டால், தூர விலகலாம்" அல்லவா?
துஷ்டனைக் கண்டு நாம் ஒதுங்கிப் போகும்போது, நமக்கு வந்த பிரச்சனை அப்போதைக்குத் தீர்ந்துவிடலாம். ஆனால், அப்பிரச்சனையின் பிறப்பிடமான அந்த ‘துஷ்டன்’ மாறும் வாய்ப்பை நாம் தரவில்லையே. அதைத்தான் இயேசு தரச்சொல்கிறார். நமது மறுகன்னத்தைக் காட்டும்போது, நமது பகைவர் மாறும் வாய்ப்பை நாம் உருவாக்குகிறோம் என்று இயேசு கூறுகிறார்.
மறுகன்னத்தைக் காட்டியதால் பகைவரிடம் உண்டான மனமாற்றங்கள், அவர்கள் பெற்ற மறுவாழ்வு இவற்றைக் கூறும் பல நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் உலகில் நடந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் புறநகர் பகுதியில் இரவு 8 மணிக்கு ஒரு பூங்காவில் ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் தினமும் வழங்கப்பட்டன. Nick என்ற இளைஞனும் இக்கூட்டத்தில் ஒருவர். அவர் கராத்தேயில் திறமைபெற்று, கறுப்புப்பட்டை பெற்றவர். பொருளாதாரச் சரிவால் அவரும் இக்கூட்டத்தில் சேரும் நிலைக்கு உள்ளானார். அவர் அன்றிரவு தன் உணவை முடித்த வேளையில், அவரைவிட பலம் மிகுந்த ஒருவர் திடீரென Nickஇடம் வந்து அவரது முகத்தில் குத்தினார். நிலை தடுமாறி விழுந்தார் Nick. சுதாரித்து எழுந்த அவர், தன்னைக் குத்தியவரிடம், "மீண்டும் குத்துவதற்கு விருப்பமா?" என்று கேட்டார். அந்த பலசாலி மீண்டும் குத்தினார். மீண்டும் விழுந்து எழுந்த Nick "மறுபடியும் குத்த விரும்புகிறாயா?" என்று அவரிடம் கேட்டார். இப்படி நான்கு அல்லது ஐந்து முறை குத்தியபின், அந்த பலசாலி கீழே அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதார். Nick அவரருகே அமர்ந்தார். பலசாலி Nickஇடம், "நான் உன்னைக் குத்தினேன் என்று காவல் துறைக்குச் சொல்... அவர்கள் வந்து என்னைக் கைது செய்யட்டும்." என்று அழுதபடியே சொன்னார்.
அந்தப் பலசாலி பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர். விடுதலை பெற்று வந்ததிலிருந்து உலகம் அவரை ஏற்றுக்கொள்ளாததால், அவரால் வெளி உலகில் வாழ முடியவில்லை. மீண்டும் சிறைக்குத் திரும்புவதே மேல் என்று அவர் எண்ணினார். Nick அவரிடம், "சரி, வா. நாம் போய் காபி அருந்தியபடியே பேசுவோம்." என்று அவரை அழைத்துச்சென்றார். பலசாலியின் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. தன்னைச் சிறைக்குள் அடைத்துக்கொள்வதே மேல் என்று எண்ணிய அந்த மனிதர், தன்னைச் சுற்றி எழுப்பியிருந்தச் சிறைகளிலிருந்து அவரை வெளியே கொண்டுவந்தது Nick அவரிடம் தன் மறுகன்னத்தைக் காட்டிய அந்த நிகழ்ச்சி. அதைத் தொடர்ந்து, Nick காட்டிய பரிவு.

பகைவரிடமும் மாற்றங்களைக் கொணரவேண்டும் என்ற எண்ணத்துடன், மறுகன்னத்தைக் காட்டும் பல வீரர்கள் இன்றும் வாழ்கின்றனர். இவர்களின் வீரச் செயல்களில் நூற்றில் ஒன்று அல்லது ஆயிரத்தில் ஒன்று என்றாவது, நமது செய்தித் தாள்களில், தொலைக்காட்சிகளில் இடம் பெறலாம். மற்றபடி நமது பெரும்பாலான செய்திகள், "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" செய்திகளே. பழிக்குப் பழி என்று, மனித வரலாற்றை இரத்தத்தில் எழுதும் நம்மைப்பற்றி சொல்லப்படும் ஒரு சீனப் பழமொழி இது: "பழிக்குப் பழி வாங்க நினைப்பவன் இரு சவக் குழிகளைத் தோண்ட வேண்டும். ஒன்று மற்றவருக்கு, மற்றொன்று தனக்கு."
பழிக்குப் பழி என்று இவ்வுலகை ஒரு கல்லறைக்காடாக மாற்றும் உலக மந்திரத்திற்கு எதிராக இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் அனைவர் மனதிலும் அழியாமல் பதிந்திருக்கும் என்பது என் நம்பிக்கை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஒடிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியினரிடையே, குறிப்பாக அங்கு துயருற்ற தொழுநோயாளர்கள் மத்தியில் உழைத்து வந்த Graham Staines என்ற கிறிஸ்தவப் போதகரையும், Philip, Timothy என்ற அவரது இரு மகன்களையும் 1999ம் ஆண்டு சனவரி மாதம் உயிரோடு எரித்துக் கொன்ற தாரா சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை இரத்து செய்யுமாறு, கொல்லப்பட்ட போதகரின் மனைவி, Gladys Staines அவர்கள் கேட்டுக்கொண்டார் என்ற செய்தியை நாம் அறிவோம். மன்னிப்பில் மட்டுமே நம்பிக்கை வளரும் என்று Gladys சொன்னதும் நமக்கு நினைவிருக்கலாம்.
மன்னிப்பதால், மறுகன்னத்தைக் காட்டுவதால் இவ்வுலகம் நம்பிக்கையில் வளரும் என்பதை அனைவரும் உணரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று மன்றாடுவோம். மறுகன்னத்தை நாம் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களின் மனங்களையும் மாற்றும் கனிவையும், துணிவையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.