2014-02-22 15:36:28

இந்தியாவில் முதியோர் பராமரிப்பு குறைந்து வருகிறது


பிப்.22,2014. 2021ம் ஆண்டுக்குள் இந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை 14 கோடியாக இருக்கும்வேளை, அவர்களைப் பராமரிப்பதற்கான சக்தியை நாடு கொண்டிருக்கவில்லை என திருப்பீட வாழ்வு அவையின் உறுப்பினர் எச்சரித்தார்.
வயது முதிர்தலும் உடல்உறுப்புக் குறைபாடும் என்ற தலைப்பில் உரோமையில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்த, திருப்பீட வாழ்வு அவையின் கருத்தரங்கில் கலந்து கொண்ட அதன் உறுப்பினர் பாஸ்கால் கர்வாலோ, இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமான தலைப்புகள் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
உலகில் முதியோரை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும், இந்திய மக்கள் தொகை இளையோரிலிருந்து முதியோரை அதிகமாகக் கொண்டிருக்கத் தொடங்கியுள்ளது என்றும் கர்வாலோ கூறினார்.
2050ம் ஆண்டில் இந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை 31 கோடியாக 60 இலட்சமாக இருக்கும் எனவும் கர்வாலோ கூறினார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.