2014-02-21 15:53:12

மிகுந்த இன்னல்களை எதிர்நோக்கும் Ukraine நாட்டு மக்களுடன் திருத்தந்தை ஒருமைப்பாட்டுணர்வு


பிப்.21,2014. இந்நாள்களில் மிகுந்த நெருக்கடிகளையும் இன்னல்களையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் Ukraine நாட்டு மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானில் இவ்வெள்ளி காலை தொடங்கிய கர்தினால்கள் அவையின் சிறப்புக் கூட்டத்தில், இந்த ஒருமைப்பாட்டுணர்வுச் செய்தியை, அனைத்துக் கர்தினால்களின் பெயரில், Ukraine நாட்டின் கர்தினால்களுக்குத் தெரிவிப்பதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இச்சிறப்புக் கூட்டத்தில் இவ்வியாழன் காலை அமர்வில் கர்தினால் வால்ட்டர் காஸ்பர் அவர்கள், குடும்பம் குறித்து ஆற்றிய உரை இறையியல் சிந்தனைகளை அதிகம் கொண்டிருந்ததாகச் சொல்லி கர்தினால் காஸ்பர் அவர்களுக்குத் தனது பாராட்டையும் நன்றியையும் இவ்வெள்ளி காலை அமர்வில் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழன் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர், கர்தினால் காஸ்பர் அவர்களின் உரையை மீண்டும் மீண்டும் தான் வாசித்ததாகவும் கூறினார் திருத்தந்தை.
மேலும், தென் சூடான், நைஜீரியா போன்ற நாடுகள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் விசுவாசத்துக்காகத் துன்புறும் எண்ணற்ற கிறிஸ்தவர்களுக்காக இக்கூட்டத்தில் கர்தினால்கள் செபித்தனர் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
இவ்வியாழன், இவ்வெள்ளி ஆகிய இரு தினங்களில் நடந்த கர்தினால்கள் அவையின் சிறப்புக் கூட்டங்களில் ஏறத்தாழ 150 கர்தினால்கள் கலந்து கொண்டனர்.
மேலும், குடும்பத்தின் நற்செய்தி குறித்து நாம் மீண்டும் கண்டுணர வேண்டுமென்று உரையாற்றிய, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் முன்னாள் தலைவர் கர்தினால் காஸ்பர், தொடக்க நூலிலும் கடவுளின் திட்டத்திலும் குடும்பம் பற்றிய கண்ணோட்டம், கடவுளின் படைப்பில் குடும்பத்தின் இடம், குடும்பப் பிரச்சனைகள் போன்றவை குறித்து விளக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.