2014-02-21 15:44:13

பிப்.22,2014. புனிதரும் மனிதரே. – துன்பங்களின் அளவுக்கு வரங்களும் கொடுக்கப்படும்


பெரு நாட்டில் உள்ள லீமா நகரில் 1586ம் ஆண்டு பிறந்தவர் இசபெல். சிறு குழந்தையாய் இருந்தபோது, இவரது முகம் ரோஜா மலரைப் போல் இருந்ததால், இவர் பெயர் ரோஸ் என வழங்கலாயிற்று.
இவர் கடும் தவ முயற்சிகளை மேற்கொண்டார். தன் அழகால் பிறருக்கு பாவ சோதனை வராமல் இருக்க தன் முகத்தில் மிளகைத் தடவிக்கொண்டு, தன் நீண்டக் கூந்தலை வெட்டினார். சிறு வயது முதல் தம் தந்தையின் தோட்டத்தில் ஒரு சிறு குடிசை அமைத்து அங்கு போய் செபிப்பார். வாரத்தில் மூன்று நாள் வெறும் ரொட்டியும் தண்ணீரும் மட்டும் உண்டு உபவாசம் இருப்பார். இடுப்பில் ஓர் இரும்புச் சங்கிலியும் தலையில் ஒரு முள் முடியும் அணிவார்.
புனித லீமா ரோஸுக்கு தையல் வேலை நன்றாகத் தெரியும். குடும்பத்தில் பணமுடை ஏற்பட்டபோது, இவர் தையல் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார்.
இளம் வயதிலேயே தம் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்த இவர் தொமினிக்கன் மூன்றாம் சபையில் சேர்ந்தார். இவர் பாவிகளின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு ஆதரவாகவும் தன் தவ முயற்சிகள் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தார்.
தான் முன்னறிவித்தபடியே ஆகஸ்ட் 24, 1617 அன்று இறைவனடி சேர்ந்தார்.
‘நம் ஆண்டவரின் கரங்களில் ஒரு பெரிய தராசைக் கண்டேன். அவர் மக்களுக்கு வர அனுமதித்த துன்ப துயரங்களுக்கு ஏற்ப வரங்களைக் கவனத்துடன் பகிர்ந்து கொடுத்தார். கடவுளுடைய தராசில் துன்பத்தின் அளவுக்கு வரங்களும் கிடைக்கின்றன என்பதை நாம் அறிய வேண்டும்’ என எடுத்துரைத்து, தன் துன்பங்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டவர் புனித லீமா நகர் ரோஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.