2014-02-21 15:54:07

Ukraineல் இடம்பெறும் இரத்தும் சிந்தும் மோதல்களுக்கு கத்தோலிக்க முதுபெரும் தந்தை கண்டனம்


பிப்.21,2014. Ukraine நாட்டில் அரசுக்கும், அரசை எதிர்ப்பவர்களுக்கும் இடையே இரத்தம் சிந்தும் கடும் மோதல்கள் அதிகரித்துவருவது குறித்து கவலை தெரிவித்துள்ள அதேவேளை, நாட்டின் அமைதிக்காக, செபத்துக்கும் உண்ணாநோன்புக்கும் அழைப்பு விடுத்துள்ளார் Ukraine கிரேக்க வழிபாட்டுமுறை கத்தோலிக்க முதுபெரும் தந்தை.
வன்முறைகள், கடவுளின் திருச்சட்டத்துக்கும், நற்செய்தியின் உண்மைகளுக்கும் முரணாக இருப்பதால் வன்முறையைத் தூண்டும் அனைத்துவிதச் செயல்களுக்கு எதிரான தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் முதுபெரும் தந்தை Sviatoslav Shevchuk.
மனித உயிர்களைத் தியாகம் செய்வது குறித்து எவரும் தீர்மானம் எடுக்க முடியாது என்றுரைத்துள்ள முதுபெரும் தந்தை Shevchuk, ஆயுதப் போராட்டங்களைப் புறக்கணித்து அமைதியைக் கட்டியெழுப்ப திருஅவை விரும்புகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, Ukraine அரசுத்தலைவருக்கும், அரசு எதிர்ப்பாளர்களுக்கும் இடையே இப்புதன் இரவு அமைதி ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டிருந்தாலும், இவ்வியாழன் காலையில் வன்முறைகள் வெடித்தன. அந்நாட்டில் தொடர்ந்து நீடித்துவரும் கலவரத்தில் இதுவரையில் 75 பேர் பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியமும் Ukraineக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.