2014-02-20 14:45:02

புனிதரும் மனிதரே : பெற்ற தாயாலே புறக்கணிக்கப்பட்டவர்(புனித பீட்டர் தமியான்)


இத்தாலியின் இரவென்னாவில் 1007ம் ஆண்டில் பெரிய குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தவர் பீட்டர். இவரது பெற்றோர் உயர் குலத்தில் பிறந்திருந்தாலும் ஏழைகளாக இருந்தனர். அதனால் பீட்டர் பிறந்தவுடன், குடும்பத்துக்கு மேலும் ஒரு சுமை என்று சொல்லி அவருடைய மூத்த சகோதரர் இந்தப் பிள்ளை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தார். பீட்டரின் தாயும் பிறந்த குழந்தைக்குப் பால் கொடுக்க மறுத்துவிட்டார். அதனால் குழந்தை பீட்டர் ஏறக்குறைய இறக்கும் நிலைக்கு வந்துவிட்டார். எனினும் அக்குடும்பத்துக்குத் துணையாக இருந்த ஒருவர் பசியால் இறந்துகொண்டிருந்த குழந்தைக்குப் பால் கொடுத்தார். இந்த நபருடைய எடுத்துக்காட்டான செயல், இவர் பீட்டரின் தாயிடம் தாய்க்குரிய கடமையை நிறைவேற்றுமாறு எடுத்துச் சொன்னது ஆகியவற்றால் உயிர்பிழைத்தார் பீட்டர். எனினும் சிறுவயதிலே பெற்றோரை இழந்து அநாதையானார் இவர். அதனால் பீட்டரை அவரது மூத்த சகோதரர் தத்து எடுத்து அடிமைபோல் நடத்தினார். பீட்டருக்கு பன்றிகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்தார். பீட்டர் பசியால் வாடினார். இரவென்னாவில் அருள்பணியாளராக இருந்த பீட்டரின் மற்றொரு சகோதரர் தமியான் என்பவர், இவர்மீது இரக்கம்கொண்டு, சில ஆண்டுகள் கழித்து இவரை அழைத்துச் சென்று பள்ளிக்கு அனுப்பினார். மிகுந்த ஆர்வத்துடன் படித்த பீட்டர் தனது 25வது வயதிலேயே பார்மாவிலும், இரவென்னாவிலும் புகழ்மிக்க ஆசிரியராக விளங்கினார். தனது சகோதரர் தமியானுக்குச் செலுத்தும் நன்றியாக, பின்னாளில் பீட்டர் தனது பெயரோடு தமியான் என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டார். இவர் ஏழைகளுக்கு உதவினார். தனது கையாலே ஏழைகளுக்கு உணவு பரிமாறினார். உண்ணாநோன்பு, உடல் ஒறுத்தல் ஆகியவைகளை இவர் செய்தாலும் பல்கலைக்கழக வாழ்வில் கண்ட இழிவான செயல்களை விரும்பாத பீட்டர் தமியான், துறவு மேற்கொண்டார். தான் சேர்ந்த ஆதீனத்தில் துறவு வாழ்வு மேன்மையடைய அயராது உழைத்தார். இவர் சிறந்த போதனையாளர், இவரது எழுத்துக்கள் புகழ் பெற்றவை. திருஅவையில் பெரும் இடர்கள் வந்த காலங்களில் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதில் தம் முயற்சியாலும், எழுத்துப் பணியாலும், தூதுவராகச் சென்றும் திருத்தந்தைக்கு உறுதுணையாக இருந்தார். 1072ம் ஆண்டில் இவர் இறந்தவுடன் புனிதராகப் போற்றப்பட்டார். கர்தினாலாகவும், ஆயராகவும் இருந்த புனித பீட்டர் தமியான் மறைவல்லுனர் என 1828ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டார். இந்தப் புனித மனிதரின் விழா பிப்ரவரி 21ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.