2014-02-20 15:57:18

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறைக்கைதிகளுடன் சந்திப்பு


பிப்.20,2014. "கட்டுகளை அவிழ்த்துவிடும் நமது அன்னை மரியா" என்ற பெயரில், புனித மார்த்தா இல்லத்தில் அமைந்துள்ள ஒரு படத்திற்கு முன்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் காலையில் சிறைக்கைதிகள் சிலரைச் சந்தித்தார்.
இத்தாலியின் Pisa மற்றும் Pianosa என்ற இரு சிறைகளில் உள்ள 19 கைதிகளை, பிப்ரவரி 19, இப்புதன் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தில், தன் புதன் பொது மறையுரைக்கு முன்னர், சந்தித்தார்.
இவ்விரு சிறைகளிலிருந்து உரோம் நகருக்கு ஆன்மீகப் பயணமாக வந்திருந்த இக்கைதிகளுக்கு, வத்திக்கான் தோட்டத்தில் அமைந்துள்ள மரியன்னையின் கெபியில் காலை 7 மணியளவில் பேராயர் Lorenzo Baldisseri அவர்கள் திருப்பலியாற்றினார்.
கைதிகளின் வரவைக் குறித்து கேள்வியுற்றத் திருத்தந்தை, தான் அவர்களைச் சந்திக்க விழைவதாகக் கூறியதால், புனித மார்த்தா இல்லத்தில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்று வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறுகிறது.
இறைவனின் கருணையையும் மன்னிப்பையும் கோரி, அக்கைதிகளில் ஒருவர் எழுதியிருந்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை, அவர்கள் அனைவரோடும் ஏறத்தாழ 45 நிமிடங்கள் உரையாடினார்.
"கட்டுகளை அவிழ்த்துவிடும் நமது அன்னை மரியா"வின் மீது தனக்குள்ள பக்தியை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அன்னையின் திரு உருவத்திற்கு முன்பாக அக்கைதிகளுக்கு தன் ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.