2014-02-20 15:54:18

திருத்தந்தை பிரான்சிஸ் : மூவொரு கடவுளாக விளங்கும் தன் இயல்பின் பிம்பமாக இறைவன் குடும்பத்தை உருவாக்கினார்


பிப்.20,2014. சமுதாயத்தின் மிக அடிப்படையான கட்டமைப்பான குடும்பத்தைப் பற்றி நாம் இந்த நாட்களில் சிந்திப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் கூடியிருந்த கர்தினால்களிடம் கூறினார்.
உலகின் பல நாடுகளிலும் பணியாற்றும் கர்தினால்கள், பிப்ரவரி 20, 21 ஆகிய இரு நாட்கள் திருத்தந்தையுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட வத்திக்கானுக்கு வந்துள்ளனர்.
ஏறத்தாழ 185 பேர் அடங்கிய இந்த கர்தினால்கள் அவையின் உறுப்பினர்களை வத்திக்கானில் இவ்வியாழன் காலை 9.30 மணியளவில் சந்தித்தத் திருத்தந்தை, அனைவரையும் வாழ்த்தி வரவேற்றதுடன், வருகிற சனிக்கிழமை கர்தினால்கலாகப் பொறுப்பேற்கும் புதிய கர்தினால்களையும் சிறப்பாக வரவேற்றுப் பேசினார்.
படைப்பின் துவக்கத்தில் மனித இனத்தை ஆண் என்றும், பெண் என்றும் படைத்து, குடும்பத்தை உருவாக்கிய இறைவன், மூவொரு கடவுளாக விளங்கும் தன் இயல்பின் பிம்பமாக குடும்பத்தை உருவாக்கினார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட இறையியலை நாம் ஆழப்படுத்தவும், இன்றைய உலகில் குடும்பங்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மேய்ப்பர்கள் என்ற கோணத்தில் தீர்வுகளைத் தேடவும் நாம் கூடியிருக்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கர்தினால்கள் அவை கூட்டத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார்.
இறைவன் மனிதர்களுக்கென வகுத்துள்ள திட்டங்களை குடும்ப உறவுகளின் வழியே மக்கள் உணர்வதற்கும், அவர்கள் இறைவனின் திட்டத்தை மகிழ்வுடன் ஏற்று, அதன்படி தங்கள் வாழ்வை அமைப்பதற்கும் நமது கலந்துரையாடல் உதவ வேண்டும் என்று திருத்தந்தை தன் ஆவலை வெளியிட்டார்.
இவ்வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள் நடைபெறும் கர்தினால்கள் அவையின் அமர்வுகள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 4.30 மணியிலிருந்து மாலை 7 மணி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.