2014-02-20 15:54:54

திருத்தந்தை பிரான்சிஸ் : ஒரு மாணவராக, அவரைப் பற்றிய அறிவை வளர்ப்பதற்குப் பதில், ஒரு சீடராக அவரைப் பின்பற்றுவதையே இயேசு விரும்புகிறார்


பிப்.20,2014. இயேசுவை ஒரு பாடநூலாகப் படிப்பதைவிட, அவரைப் பின் செல்வதையே அவர் புரிந்துகொள்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.
பிப்ரவரி 20, இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், தன்னை யாரென்று மக்களும் சீடர்களும் கூறுகின்றனர் என்பதை அறிய இயேசு எழுப்பிய கேள்விகளை திருத்தந்தை தன் மறையுரையின் மையமாக்கினார்.
ஒரு மாணவராக மாறி, இயேசுவைப் பற்றிய அறிவை வளர்ப்பதற்குப் பதில், ஒரு சீடராக மாறி, அவரை பின்பற்றுவதையே இயேசு விரும்புகிறார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இயேசுவைப் பின்பற்றும் வேளையில், நெருக்கடிகள், தவறுகள், காட்டிக் கொடுத்தல் என்ற பல்வேறு பிரச்சனைகள் வந்தாலும், அவரைத் தொடர்வது ஒன்றே உண்மையான சீடரின் அடையாளம் என்பதை திருத்தந்தை வலியுறுத்தினார்.
"என்னைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்" என்று இயேசு தன் சீடர்களுக்குக் கூறவில்லை; மாறாக, "என் பின்னே வாருங்கள்" என்றே அவர்களை அழைத்தார் என்பதை திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
நம் அறிவுப் பசியைத் தீர்க்கும் வண்ணம் இயேசுவைப் பற்றி புரிந்துகொள்வதைவிட, நம் உள்ளத்து வேட்கையுடன் அவரை பின்செல்ல, நமது தனிப்பட்ட வலிமை மட்டும் போதாது; தூய ஆவியாரின் துணையும் நமக்கு வேண்டும் என்று திருத்தந்தை தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.