2014-02-19 15:17:08

அருள் பணியாளர் Lombardi - 8 கர்தினால்கள் குழுவின் செயல்பாடுகள்


பிப்.19,2014. பிப்ரவரி 20, 21 ஆகிய நாட்களில் வத்திக்கானில் கூடும் கர்தினால்கள் அவையினர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மேற்கொள்ளும் விவாதங்கள், வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் சிறப்பு ஆயர் மாமன்றத்திற்கு தயாரிப்பாக அமையும் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் கூறினார்.
பிப்ரவரி 17 இத்திங்கள் முதல் 19, இப்புதன் முடிய திருத்தந்தையுடன் ஆலோசனைகளைப் பகிர்வதற்குக் கூடியிருக்கும் 8 கர்தினால்கள் குழுவைக் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இயேசு சபை அருள் பணியாளர் Lombardi அவர்கள், இவ்வியாழன், வெள்ளி ஆகிய இருநாட்கள் வத்திக்கானில் நடைபெறும் கர்தினால்கள் கூட்டத்தைக் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
வத்திக்கான் வங்கி என்று பொதுவாகப் பெயர்பெற்றுள்ள IOR எனப்படும் சமயப்பணிகள் நிறுவனத்தின் செயல்பாடுகளைக் குறித்து திருத்தந்தை அவர்கள் எட்டுக் கர்தினால்களுடனும், இந்நிறுவனத்தின் உறுப்பினர்களுடனும் உரையாடல்கள் மேற்கொண்டார் என்று கூறிய அருள் பணியாளர் Lombardi அவர்கள், இந்நிறுவனத்தின் மறுபரிசீலனை இன்னும் தொடரும் என்பதை மட்டும் குறிப்பிட்டார்.
திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கக் கூடியுள்ள இந்த 8 கர்தினால்கள் குழுவுடன், திருப்பீடச் செயலர், பேராயர் Pietro Parolin அவர்களும் இக்கூட்டங்களில் கலந்துகொண்டார் என்றும் அருள் பணியாளர் Lombardi அவர்கள் அறிவித்தார்.
இவ்வியாழன், வெள்ளி ஆகிய இருநாட்கள் நடைபெறும் கர்தினால்கள் அவை கூட்டத்திற்குப் பிறகு, பிப்ரவரி 22, சனிக்கிழமை, திருத்தூதர் பேதுருவின் தலைமைப்பீடத் திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேலும் 19 பேரை கர்தினால்களாக உயர்த்தும் திருச்சடங்கு நடைபெறும்.
பிப்ரவரி 23, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய கர்தினால்களுடன் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சிறப்புத் திருப்பலியாற்றுவார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.