2014-02-18 14:53:59

புனிதரும் மனிதரே நகைச்சுவையும் புனிதமும் நல்ல நண்பர்கள் (புனித பிலிப் நேரி)


மிருகத்தின் உரோமம் உள்புறமாய் இருக்குமாறு உருவாக்கப்படும் உரோமச்சட்டையை ஒருவர் தன் தோல்மீது அணிவது, பழம்பெரும் மதங்கள் பலவற்றில் கடைபிடிக்கப்பட்ட ஒரு தவமுயற்சி. பாவங்களுக்குப் பரிகாரமாகவும், உடலைக் கட்டுப்படுத்தவும் இத்தகைய ஒறுத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் இளந்துறவி, உரோமச்சட்டையை அணிந்து ஒறுத்தல் செய்ய விழைந்தார். தன் ஆன்மீக வழிகாட்டியிடம் அவர் தன் ஆவலை வெளியிட்டபோது, அந்த வழிகாட்டி அவருக்குப் புதிரானதோர் உத்தரவு கொடுத்தார். யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணத்துடன், உரோமச் சட்டையை தோலுக்கு மேல் அணிந்து, வேறு உடைகளை மேலே அணிவது வழக்கம். இந்த வழக்கத்திற்கு மாறாக, உரோமச் சட்டையை மற்ற உடைகளுக்கு மேல், அனைவருக்கும் தெரியும்படி அணியுமாறு இளந்துறவியிடம் கூறினார் அந்த ஆன்மீக வழிகாட்டி. இளையவரும் இந்த அறிவுரையைப் பின்பற்றினார்.
இளந்துறவி தன் உடைகளுக்கு மேல் உரோமச் சட்டையை அணிந்திருந்ததைக் கண்ட மற்றவர்கள் அவரைக் கேலி செய்தனர். அவை அனைத்தையும் அவர் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டார். பின்னர், அவர் தன் ஆன்மீக வழிகாட்டியைச் சந்தித்தபோது, அவர் இளையவரிடம், “யாருக்கும் தெரியாத வண்ணம் உரோமச் சட்டை அணிந்து, தனிப்பட்ட முறையில் ஒறுத்தல் மேற்கொண்டு, உள்ளுக்குள் பெருமை உணர்வு கொள்வதைவிட,, உரோமச் சட்டையை வெளியில் அணிந்து, அனைவருடைய கேலிக்கும் உள்ளாகி, தாழ்ச்சியை வளர்த்துக்கொள்வதே சிறந்த தவ முயற்சி” என்பதை இந்த இளையவருக்கு சொல்லித் தந்தார் அந்த ஆன்மீக வழிகாட்டி.
இப்பாடத்தை சொல்லித் தந்த ஆன்மீக வழிகாட்டி, புனித பிலிப் நேரி அவர்கள். "நகைச்சுவை உணர்வுடைய புனிதர்" என்று புகழ்பெற்ற புனித பிலிப் நேரி அவர்கள், நகைச்சுவையும் புனிதமும் நல்ல நண்பர்கள் என்பதை தன் வாழ்வின் வழியாக, உலகிற்கு உணர்த்தியவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.