2014-02-18 15:19:02

பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகம் மூன்றாவது இடம்


பிப்.18,2014. உலகம் முழுவதும், ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட, ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில், 801 பட்டியல்களை அளித்து, தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த வெள்ளி முதல் இத்திங்கள்வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த கணக்கெடுப்பில், தனி நபர்கள், பறவைகள் ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.
இக்கணக்கெடுப்பின் இறுதி நாளான இத்திங்கள் மாலை நிலவரப்படி, நாடு முழுவதும், 1,054 வகையைச் சேர்ந்த பறவைகள் குறித்த 7,671 கணக்கெடுப்புப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பறவைகள் கணக்கெடுப்பு குறித்த, 801 பட்டியல்களைச் சமர்ப்பித்து தமிழகம் தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகா, கேரளா மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அதிக வகைப் பறவைகள் கணக்கெடுக்கப்பட்ட வகையில், 377 வகைகளுடன் தமிழகம் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
வீட்டுக் காகம், மாடப்புறா, குருவிகள் போன்றவையே ஊர்ப்புறப் பறவைகளாகக் கருதப்படுகின்றன.
இவை போன்ற பறவைகளைப் பாதுகாப்பதற்கு, பொதுமக்கள் அவரவர் வாழும் இடங்களுக்கு அருகில் உள்ள நீர் நிலைகளை உள்ளதை உள்ளபடியே விட்டு வைத்தாலே போதும். அதைப் பயன்படுத்தி, பறவைகள் வாழ்ந்துவிடும் என, இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற, பறவை ஆர்வலரும், தகவல் தொழில்நுட்ப வல்லுனருமான பாலாஜி கூறினார்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.