2014-02-18 15:18:15

திருப்பீடத்தின் பொருளாதார மற்றும் நிர்வாக அமைப்புகளைச் சீரமைப்பு செய்வது குறித்த கர்தினால்கள் அவையின் மூன்றாவது கூட்டம்


பிப்.18,2014. திருப்பீடத்தின் பொருளாதார மற்றும் நிர்வாக அமைப்புகளைச் சீரமைப்பு செய்வது குறித்து பரிசீலிக்கும் எட்டு கர்தினால்கள் அவையின் மூன்றாவது கூட்டம் இத்திங்களன்று வத்திக்கானில் தொடங்கியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்குகொள்ளும் இக்கூட்டம் பற்றி நிருபர் கூட்டத்தில் விளக்கிய திருப்பீட பேச்சாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி, ஏறக்குறைய எட்டு மாதங்களாக இக்கர்தினால்கள் அவை வேலை செய்து வருகிறது என்றும், முதல் வரைவுத் தொகுப்புகளை அல்லது ஆலோசனைகளை அல்லது பரிந்துரைகளை இவ்வவை முன்வைத்திருக்கலாம், ஆனால் எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லையெனக் கூறினார்.
மேலும், வத்திக்கான் வங்கியைச் சீரமைப்பு செய்வது குறித்து ஆராய்ந்துவரும் மற்றொரு குழுவுடன், இச்செவ்வாய் காலை திருத்தந்தையும், இந்த எட்டு கர்தினால்கள் அவையும் கூட்டம் நடத்தியது.
இப்புதன் மாலையில் 15 கர்தினால்கள் கொண்ட அவையையும் இந்த எட்டு கர்தினால்கள் அவை சந்திக்கும் என்றும் அருள்பணி லொம்பார்தி கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.