2014-02-17 15:07:51

வாரம் ஓர் அலசல் – சொல்லால் சுட்ட புண் ஆறாது


பிப்.17,2014. RealAudioMP3 ‘துப்பாக்கி முனையிலிருந்து வெளிவரும் குண்டுகளைக் காட்டிலும் நான் கொடுமையானவன். மற்றவர்களைக் கொல்லாமலேயே வெற்றிபெறுவேன். நான் குடும்பங்களை இடித்துப்போடுவேன். உள்ளங்களை உடைப்பேன். வாழ்வைச் சின்னாபின்னமாக்குவேன். காற்றிலும் வேகமாகப் பறப்பேன். குற்றமற்றவருங்கூட என்னை அச்சுறுத்த முடியாது. எந்தத் தூய்மையும் என்னை நடுங்கச் செய்யுமளவுக்குத் தூய்மை படைத்ததல்ல. நான் உண்மையை மதிப்பதில்லை. நியாயத்தைக் கனப்படுத்துவதில்லை. தற்காப்பற்றவர்களுக்கு இரக்கம் பாராட்டுவதேயில்லை. எனக்குப் பலியானவர்கள் கடற்கரை மணலைப்போல மிகுதியாயிருக்கிறார்கள். ஒன்றுமறியாதவர்கள்கூட எனக்கு இலக்காகியிருக்கிறார்கள். நான் மறப்பதுமில்லை மன்னிப்பதுமில்லை. எனது பெயர்தான் புறங்கூறுதல்”. அன்பர்களே, இப்படியொரு இடுகையை சத்தியவசனம் என்ற வலைத்தளத்தில் வாசிக்க நேர்ந்தது. மனிதரின் ஐம்புலன்களில், வாய்மூலம் இழைக்கிற பாவப்பட்டியலில், புறங்கூறுதலையும் சேர்த்திருக்கிறது புத்த மதம். இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் புறங்கூறுதல் முக்கிய இடம் வகிக்கிறது. கைகேயியிடம் கூனி மூட்டிய புறங்கூறுதல் எனும் தீ, இராமாயணத்தில் முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தியது. அதேபோல், சகுனி கௌரவர்களிடம் புறங்கூறி பற்ற வைத்த தீவினையே மகாபாரதப் போருக்கு முக்கியக் காரணமாக இருந்தது.
ஒருவர் பாவங்களைச் செய்பவராக இருந்தாலும் அவர் புறங்கூறாதிருப்பது நல்ல புண்ணியம் என்று சொல்லும் வள்ளுவர், புறங்கூறாமைக்கு ஒரு தனி அதிகாரத்தையே ஒதுக்கியிருக்கிறார். ஒருவரது சொல்லால் ஒரு தீமை ஏற்பட்டாலும், அதனால் அவர் செய்த நன்மையெல்லாம் தீமையாகிவிடும் என்றும் வள்ளுவர் சொல்லியிருக்கிறார். நாவைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் நம் வாழ்வு தூய்மை அடையும் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அடிக்கடி மக்களிடம் கூறி வருகிறார். இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் மீண்டும் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
RealAudioMP3 "ஒருவர் பாம்பின் நாக்கைக் கொண்டிருக்கின்றார் என்றால் என்ன அர்த்தம்? அந்த நபரின் சொற்கள் பிறரைக் கொன்றுவிடும் என்பதுதான். ஆதலால் புறணிபேசுதல் பிறரைக் கொன்றுவிடும். ஏனெனில் இது ஒருவரின் புகழைக் கொன்றுவிடும். புறணிபேசுதல் ஒரு மோசமான செயல். புறணிபேசுவது தொடக்கத்தில் மகிழ்ச்சிதரக்கூடியதாகவும், கேலிக்குரியதாகவும் இருக்கலாம். ஆனால் நாளடைவில் அது நம் இதயங்களைக் கசப்புணர்வினால் நிறைத்து நம்மை நச்சுப்படுத்தும். எனவே நாம் ஒவ்வொருவரும் புறணிபேசுதலைத் தவிர்த்தால் நாம் புனிதர்களாக மாறிவிடுவோம். இது இனிதான பாதையல்லவா! நாம் தூயவர்களாக வாழ விரும்புகிறோமா? அல்லது வழக்கம்போல் புறணிபேசிக்கொண்டிருக்கப் போகிறோமா?".
வத்திக்கான் வாளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் மூவேளை செப உரையைக் கேட்டுக்கொண்டிருந்த ஏறக்குறைய ஐம்பதாயிரம் திருப்பயணிகளிடம் இக்கேள்விகளை எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ், புறணிபேசுதலைத் தவிர்ப்போம் என்பதற்கு நாம் உறுதி கூறுவோம் என்றார். இத்தாலிய அரசு தொலைக்காட்சிகளும், புறங்கூறுதல் பற்றிய திருத்தந்தையின் இவ்வார்த்தைகளை இஞ்ஞாயிறு செய்தி ஒளிபரப்பில் மீண்டும் கூறின. RealAudioMP3 இதிலிருந்தே இன்றைய சமூகத்துக்கு இந்த அறிவுரை எவ்வளவு தேவை என்பது தெளிவாகிறது. Gossip என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, புறங்கூறுதல், பயனில பேசுதல், செய்தி பரப்புதல், வீண்பேச்சு, வதந்தி, பழிமொழி, மனம்போன போக்கிலான வரம்பற்ற பேச்சு, வாய்க்கு வந்தன கூறுதல், வீண் உரையாடல் ஆகிய சொற்கள் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்தல்கள் சமயங்களில் அரசியல்வாதிகள் ஒருவர் மற்றவர் பற்றி பழித்துப் பேசுவதும், உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதுமான நாகரீகமற்ற செயல்கள் சாதாரணமாகிவிட்டன. கட்சி மாநாடுகள் ஒருபுறம் களைகட்ட, தொண்டர்கள் மதுபானக் கடைகளில் குவாட்டர்களை வாங்குவதற்குப் போட்டிப் போடுவதையும், போதையில் அவர்கள் உளறும் அசிங்கங்களையும் ஊடகங்களில் காண முடிகின்றது. கடந்த வாரத்தில் திருச்சியில் நடந்த கட்சி மாநாட்டில் 10 கோடி ரூபாய்க்கு, "டாஸ்மாக்' மதுபானங்கள் விற்பனையாகின, இதை, குவாட்டர் அளவில் கணக்கிட்டால், 1 கோடியே 25 இலட்சம் மது பாட்டில்களுக்குச் சமம் என ஒரு தினத்தாள் குறிப்பிட்டிருந்தது. நாவைக் கட்டிக்காத்து அடக்கத் தெரியாததாலே வரலாற்றில் பல பெரும் குற்றங்கள் நடந்துள்ளன, பல அப்பாவிகள் அநியாயமாய் உயிர்களை இழந்துள்ளனர், பல குழந்தைகள் சிறுவயதிலேயே அநாதைகளாக விடப்பட்டுள்ளனர். பிறரைப் பழித்துப் பேசுதல், ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிப் பிறரிடம் அவதூறாகவோ அல்லது எதிர்மறையாகவோ சொல்லி பிறரின் வாழ்வை அழுக்காக்குதல், வீண்பேச்சு, கதை திரித்தல், உள்ளதைக் கூட்டிப்பேசுதல், தீய ஆலோசனை, ஒன்றுமில்லாததைப் பெரிதுபடுத்தல், பொய்பேசுதல் எல்லாமே புறங்கூறுதல்தான். இதனை இக்கால இளையோரின் மொழியில் சொன்னால், 'பற்ற வைத்தல்’ அல்லது 'போட்டுக் கொடுத்தல்’ என்பதாகும். அன்பர்களே, நம்மை மட்டும் அல்ல, நாம் யாரைப் பற்றிப் புறணி பேசுகின்றோமோ அவர்களையும் அழிக்கின்ற ஆயுதங்களில் ஒன்று ‘புறங்கூறுதல்’.
பொதுவாக, ஒருவர் அருகில் இல்லாதபோது, அந்த நபரின் எதிர்மறைக் குணங்களே பலருக்கு நினைவுக்கு வருகின்றன. இன்னும் சிலர் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், மேலதிகாரிகளிடம் தங்களது அலுவலக சகாக்களைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். உயரதிகாரியிடம் தான் கொண்டுள்ள விசுவாசத்தைக் காண்பிக்கும் ஓர் உத்தி இது. தான் செய்யும் தவறுகளில் இருந்து அதிகாரியின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கமும் இதில் உண்டு. மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் உத்தியாகவும், பிறரைவிடத் தாங்கள் சிறந்தவர்கள் எனக் காட்டிக்கொள்ளும் கருவியாகவும் சிலர் புறங்கூறுதலைக் கையாளுகின்றனர். இன்னும் சிலருக்கு மற்றவர்களின் இரகசியங்களை அம்பலமாக்குவதில் அற்ப மகிழ்ச்சி! பிறர் துன்பப்படுவதில் மகிழ்ச்சி காணும் சாடிஸ்ட் மனப்பான்மை உள்ளவர்களும் புறங்கூறுதலில் ஈடுபடுவார்கள். தங்கள் பிரச்சனையைத் தாங்களாகவே தீர்த்துக்கொள்ள இயலாதவர்கள், மற்றவர்களிடம் உதவி நாடும்போது, புறங்கூறுகிறார்கள் என்பது உளவியலாளர்கள் கருத்து.
கண்ணன் திறமையான ஊழியர். ஆனால், புறங்கூறுவதில் மன்னர். கணக்கர் வேலை செய்யும் அவர், கிளை அலுவலகத்திலிருந்து வட்டார அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். வந்தவுடன் வட்டார அலுவலக மேலாளரிடம், தான் முன்பு வேலை பார்த்த கிளை அலுவலகத்தில் பணிபுரிந்த அனைவரைப் பற்றியும் கோள்சொல்ல ஆரம்பித்தார். வெகு விரைவிலேயே புதிய அலுவலகத்தில் மேலாளரின் பூரண நம்பிக்கையையும் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வட்டார அலுவலகங்களைக் கட்டுப்படுத்தும் மண்டல அலுவலகத்துக்குப் பதவி உயர்வுடன் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும்படி, கண்ணனின் மேலாளரிடம் உயரதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். கண்ணனையே அவர் பரிந்துரை செய்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவரோ கண்ணனைவிடச் சற்றே தகுதி குறைவான வேறொருவரை பரிந்துரை செய்தார். கண்ணனை நமக்கும் மேலே இருக்கிற அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தால் நமது அலுவலகம் பற்றி நிச்சயம் போட்டுக் கொடுத்துடுவார் என்ற பயம்தான் இதற்குக் காரணம்.
‘புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்’ (நீ.மொ.11:13) என விவிலியம் சொல்கிறது. சிறியதொரு தீப்பொறி எத்துணை பெரிய காட்டையும் கொளுத்தி விடுகின்றது. நாவும் தீயைப் போன்றது. எனவே பேச்சில் தவறாதோர் நிறைவுபெற்றவர் என்று யாக்கோபு சொல்கிறார்(3,5). ஆகவே அன்பர்களே, எதைப் பேசுகிறோம் என்பதும், எதைப் பேசாதிருக்கிறோம் என்பதும் மிக மிக முக்கியம். தகுதியான பேச்சு என்பது, சரியான நேரத்தில் சரியானதைப் பேசுவது மாத்திரமல்ல; பேசக்கூடாததைப் பேசாமல் இருக்கும்படி நம்மைக் கட்டுப்படுத்துவதும் ஆகும். எதைப் பேச நினைத்தாலும், ‘நான் பேசுவதில் உண்மை உள்ளதா?’ ‘இது தேவைதானா?’ என்ற கேள்விகளை நமக்கு நாமே முதலில் கேட்டுப் பார்த்தால் புறங்கூறுதல் தானாகவே அடங்கிவிடும்.
ஒருமுறை ஒரு விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த வழக்கைப் பதிவுசெய்த கணவரிடம், நீங்கள் மணவிடுதலை கோருவதன் காரணம் என்னவெனக் கேட்டார். அதற்கு அவர், என் மனைவியின் குறைகளைச் சொல்ல நான் விரும்பவில்லை என்றார். பின்னர் எல்லா விசாரணைகளும் முடிந்து அத்தம்பதியருக்கு மணவிடுதலை தந்தார் நீதிபதி. நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அந்தக் கணவரிடம், ‘இப்பொழுதுதான் அவள் உன் மனைவி இல்லையே, இப்போதாவது அவள் குறைகள் என்னவென்று சொல்லக்கூடாதா?’’ என்று அவரைக் கேட்டார். அதற்கு அவர், ‘இப்பொழுது அவள் என் மனைவி இல்லை என்பது உண்மைதான், எனக்குத் தொடர்பில்லாத ஒரு பெண்ணின் குறைகளை வெளிப்படுத்த நான் விரும்பவில்லை என்று பதில் தந்தார் என்று ராம்மலர் என்ற வலைத்தளத்தில் பதிவாகியிருந்தது.
அன்பர்களே, பிறரிடம் அன்பும் கருணையும் இருந்தால், நம்மைப் போல் பிறரையும் அன்பு செய்தால் பிறர் பற்றி நாம் ஒருபோதும் புறங்கூறமாட்டோம். இயேசுவின் அருள்மொழியின்படி, பிறர் கண்ணில் இருக்கும் துரும்பை எடுப்பதற்கு முயற்சிக்கு முன்னர் நம் கண்களில் இருக்கும் விட்டத்தை அகற்ற முதலில் முயற்சிப்போம். பிறர்பற்றிப் பேசும்போது ஒரு நிமிடம் நம்மை நாமே நினைத்துப் பார்ப்போம். இதே மாதிரியான அவதூறுகள் என்னைப் பற்றிப் பேசப்பட்டால் எனது உணர்வுகள் எப்படி இருக்கும் என்று. எனவே பிறர் பற்றி நல்லதே பேசி நல்லதையே நினைப்பதற்கு நம் உள்ளம் வேட்கை கொள்ளட்டும். இப்படி வாழ இயலவில்லையெனில் இந்தத் தீய பழக்கத்திலிருந்து விடுதலையடைய இறைவனின் அருளை இறைஞ்சுவோம். சொல்லால் சுட்ட புண் குணமடைவது எளிதல்ல.







All the contents on this site are copyrighted ©.