2014-02-17 15:48:56

திருத்தந்தை பிரான்சிஸ் - புறணி பேசுவது, மனிதரைக் கொல்லும் வலிமையுடையது


பிப்.17,2014. சட்டங்களைக் கடைபிடிக்கிறோமா என்பதைமட்டும் கடவுள் பார்ப்பதில்லை, மாறாக, விசுவாசிகளின் இதயத்தையும் அவர் உற்று நோக்குகிறார் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
யூதச் சட்டங்களை இயேசு எவ்விதம் அணுகினார் என்பதுபற்றி தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை அவர்கள், "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்" என்ற இயேசுவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்.
மோசே வழியாக இறைவன் வழங்கிய கட்டளைகளை முழுமையாக்கவே கிறிஸ்து வந்தார் என எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "'கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; 'தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்" என்று இயேசு கூறியதைச் சுட்டிக்காட்டி, வார்த்தைகளும் மனிதரைக் கொல்லும் வலிமையுடையன என்று கூறினார்.
மற்றவரைக் குறித்து புறணி பேசுவதையும், தவறான கருத்துக்களைப் பரப்புவதையும் ஒவ்வொருவரும் நிறுத்தவேண்டும், ஏனெனில், இத்தகைய நஞ்சு கலந்த வார்த்தைகள், மனிதரைக் கொல்லும் சக்திபடைத்தவை என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக் காட்டினார்.
தன் சகோதர, சகோதரிகளோடு சமாதானமாகப் போக முடியாதவர் இறைவனோடு கொண்டிருக்கும் உறவிலும் உண்மையுள்ளவராக இருக்கமுடியாது என்பதையும் திருத்தந்தை தன் மூவேளை செப உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.