2014-02-15 14:46:49

”ஏழைகளின் திருஅவையாக உண்மையிலேயேச் செயல்பட” : இந்திய ஆயர் பேரவைக் கூட்டத்தின் செய்தி


பிப்.15,2014. ஊழலும் வன்முறையும் நிறைந்த ஒரு சமூகத்தில், எளிமை, ஒளிவுமறைவற்ற ஒருநிலை, நீதி, கருணை ஆகிய பண்புகளின் எடுத்துக்காட்டாய் வாழ்வதற்கு இந்தியத் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்று இந்திய ஆயர்கள் கூறினர்.
கேரளாவின் பாலாய் நகரில் இம்மாதம் 5 முதல் 13 வரை நடந்த இந்திய ஆயர் பேரவையின் 31வது நிறையமர்வுக் கூட்டத்தின் இறுதியில் செய்தி வெளியிட்டுள்ள ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பின்பற்றி, இந்தியத் திருஅவையும் ஏழைகளின் திருஅவையாக உண்மையிலேயேச் செயல்பட வேண்டுமென்று தாங்கள் விரும்புவதாகத் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியத் திருஅவை, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் கண்ணோட்டத்தின்படி வாழ முனைகின்றது என்பதை உறுதி செய்துள்ள ஆயர்கள், மனிதரை மதித்தல், ஒருமைப்பாடு, உரையாடல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில், துன்புறும் மனிதரின் போராட்டங்களில் திருஅவை ஈடுபட்டு வாழ விரும்புகின்றது என்றும் கூறியுள்ளனர்.
187 ஆயர்கள் மற்றும் பணிக்குழுக்களின் செயலர்கள் கலந்து கொண்ட 31வது நிறையமர்வுக் கூட்டம், “ஒரு புதுப்பிக்கப்பட்ட சமூகத்துக்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட திருஅவை” என்ற தலைப்பில் நடைபெற்றது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.