2014-02-15 14:07:38

புனிதரும் மனிதரே தற்காலிகமான நெருப்புக் காயங்களைப்பற்றி கவலையில்லை (Saint Juliana of Nicomedia)


"நீங்களும் என்னைப்போல் இயேசு கிறிஸ்துவை நம்பி வழிபடுபவராக மாறினால் மட்டுமே நான் உங்களைத் திருமணம் செய்துகொள்வேன். நாம் இருவரும் வெவ்வேறு மத நம்பிக்கை கொண்டு, மனதளவில் பிரிந்திருக்கும்போது, உடலளவில் மட்டும் ஒன்றிணைவது முடியாது" என்று 18 வயது இளம்பெண் ஒருவர், உரோமைய அரசவை உறுப்பினர் ஒருவரிடம் கூறினார். மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ஜூலியானா என்ற இளம்பெண், தன்னை மணக்க விரும்பிய அரசவை உறுப்பினர் Eleusiusஇடம் தன் கிறிஸ்தவ நம்பிக்கையைத் துணிவுடன் வெளிப்படுத்தினார்.
ஜூலியானாவின் பெற்றோர், மற்றும் நண்பர்கள் அவரது மனதை மாற்ற முயற்சிகள் செய்து, தோற்றனர். இளம்பெண் ஜூலியானா, தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணிய Eleusius, அவரைச் சிறையில் அடைத்து, கொடிய சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார். எதைக்கண்டும் அஞ்சாத ஜூலியானாவை, Eleusius தன் ஆத்திரம் தீர சாட்டையால் அடித்தார். நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய இரு கம்பிகளைக் கொண்டு, ஜூலியானாவின் முகத்தில் தீக்காயங்களை உருவாக்கினார். "உன் அழகை இப்போது போய் கண்ணாடியில் பார்" என்று கத்திய Eleusiusஇடம், ஜூலியானா அமைதியாக, "நிரந்தர நெருப்பான நரகத்தில் காயப்படுவதைவிட, தற்காலிகமான இந்த நெருப்புக் காயங்களைப்பற்றி நான் கவலைப்படவில்லை" என்று கூறினார்.
இறுதியில், 304ம் ஆண்டு, ஜூலியானா தலை வெட்டப்பட்டு, கொலையுண்டார். அவர் தலைவெட்டப்பட்டதைக் காணவந்த 700க்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் கிறிஸ்தவ மறையைத் தழுவ முன்வந்தனர் என்றும், அவர்கள் அனைவரும் தலைவெட்டப்பட்டு கொலையுண்டனர் என்றும் சொல்லப்படுகிறது. நலமாகக் குழந்தையைப் பெறுவதற்கும், நோயுற்றோருக்கும் புனித ஜூலியானா பாதுகாவலராகக் கருதப்படுகிறார். இவரது திருநாள் பிப்ரவரி 16ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.