2014-02-14 16:05:22

பிப்.15,2014. புனிதரும் மனிதரே. – போதிக்கும்போது சிங்கமாகும் ஆட்டுக்குட்டி


நோயாளிகள், சிறைக் கைதிகள், கைவிடப்பட்டக் குழந்தைகள், கப்பல் பயணிகள் ஆகியோரை சந்திப்பதை தன் முக்கியப் பணிகளுள் ஒன்றாகக் கொண்டிருந்தார் இயேசுசபை அருட்திரு பிரான்சிஸ் ஜெரோம். ஒருமுறை நேப்பிள்ஸ்க்கு வந்த கப்பலில் ஒரு போர்வீரரைச் சந்தித்தார். இவர் கனிவாகப் பேசத் துவங்கியதும் அந்தப் போர்வீரர் கண்ணீர்விட்டு அழுது, தன் பாவங்களை அறிக்கையிடத் துவங்கிவிட்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இஸ்பானிய படைவீரராக இருந்த அந்த போர்வீரர் உண்மையில் ஒரு பெண். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இப்பெண், தன் தந்தையைக் கொலைச்செய்துவிட்டு, தண்டனையிலிருந்து தப்பிக்க, ஆண்போல் வேடமிட்டு இஸ்பானிய படையில் சேர்ந்து பணியாற்றி வந்திருக்கிறார். புதுமைகள் பல ஆற்றும் சக்திகொண்ட புனித பிரான்சிஸ் ஜெரோமில் நம்பிக்கை வைத்து, தன் பாவங்களை அறிக்கையிட்டு கழுவாய்த் தேடிய மேரி ஆல்விரா சாசியேர் என்ற அந்தப் பெண்மணி, அதன் பின் இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார். இதுபோல், எண்ணற்றோரின் மனமாற்றத்திற்கு காரணமான புனித பிரான்சிஸ் ஜெரோம், இத்தாலியின் தாரந்தோவில் பிறந்தவர். 11 குழந்தைகளுள் மூத்தவராக பிறந்த பிரான்சிஸ் தி ஜிரோலாமோ அதாவது பிரான்சிஸ் ஜெரோம், தன் 12ம் வயதிலேயே சிறார்களுக்கு மறைக்கல்வி வகுப்பு நடத்தியவர். இயேசு சபையில் சேர்ந்து தன் 24ம் வயதில் குருவானார். தூரகிழக்கு நாடுகளுக்குச் சென்று மறைப்பணியாற்றவேண்டும் என்ற ஆவல் இருந்தபோதிலும், தன் உயர் அதிகாரிகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நேப்பிள்ஸ் நகரிலேயேப் பணியாற்றினார். ஒரு பெரிய போதகராக அறியப்பட்டார். இவர் போதனைகளில் அனல் பறந்தது. 'இவர் ஒரு வெள்ளாட்டுக்குட்டிதான். ஆனால் போதிக்கும்போது சிங்கமாக மாறிவிடுகிறார்' என இவரைப்பற்றி மக்கள் கூறுவதுண்டு. பாவிகள் தன்னைத் தேடி வரும்வரைக் காத்திருக்காமல், அவர்களைத்தேடி தானே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் புனிதர் பிரான்சிஸ் ஜெரோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.