2014-02-14 16:04:39

திருத்தந்தை பிரான்சிஸ் : இளையோரின் ஆழமான தேடல்களுக்குப் பதில் சொல்வதாய் மேய்ப்புப்பணித் திட்டங்கள் இருக்க வேண்டும்


பிப்.14,2014. செபத்தில் நிலைத்திருந்து, தம் மக்களுக்குச் சேவை செய்வதில் தாராளமனத்தை வெளிப்படுத்தி இறைவார்த்தையை அறிவிப்பதில் ஆர்வமுடன் செயல்படுமாறு Czech குடியரசு ஆயர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் 'ad Limina' நிகழ்வையொட்டி Czech குடியரசு ஆயர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்களின் முக்கிய ஒத்துழைப்பாளர்களாகிய அருள்பணியாளர்களிடம் தந்தைக்குரிய அன்புடன் நடந்துகொள்ளுமாறும் கூறினார்.
மக்கள் மத்தியில் நம்பிக்கையும் மனஅமைதியும் ஏற்படுவதற்கு உதவியாக மேய்ப்புப்பணித் திட்டங்களை அமைக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்த மேய்ப்புப்பணித் திட்டங்கள் பரந்துபட்டதாய், இறையழைத்தலை ஊக்குவிப்பதாய், இளையோரின் ஆழமான தேடல்களுக்குப் பதில்சொல்வதாய் அமைய வேண்டுமெனவும் கூறினார்.
அருளடையாளங்கள் மற்றும் திருவழிபாடுகளில் விசுவாசிகள் உயிர்த்துடிப்புடன் கலந்து கொள்வதற்கு உதவும் தகுந்த முயற்சிகள் எடுக்குமாறும் கூறிய திருத்தந்தை, சமூக வாழ்வின் முதுகெலும்பாகிய குடும்பங்கள் மீது கவனம் செலுத்தவும் பரிந்துரைத்தார்.
ஆயர்கள் மத்தியில் ஒன்றிப்பும் ஒருமைப்பாடும் இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்தே இருக்கின்றோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் சொத்துக்களைக் கவனத்துடனும் ஒளிவுமறைவின்றியும் நிர்வகித்து, நம்பிக்கைக்குரிய மற்றும் திறமையான ஆள்களின் உதவியுடன் அவற்றைப் பாதுகாக்குமாறும் கேட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.