2014-02-14 16:05:48

சிறார்க் கருணைக்கொலைக்கு ஆதரவான நடவடிக்கை குறித்து பெல்ஜிய ஆயர்கள் கவலை


பிப்.14,2014. பெல்ஜிய நாடாளுமன்றம் சிறார்க் கருணைக்கொலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளவேளை, நாடாளுமன்றத்தின் இச்செயலால் தாங்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள்.
பெல்ஜிய செனட் அவையால் கடந்த ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட இம்மசோதாவுக்கு ஆதரவாக, தற்போது அந்நாட்டின் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. இதன்மூலம் தீராத நோய் மற்றும் கடும் வேதனையால் துன்புறும் சிறார் இறக்க விரும்பினால் அவர்களைக் கொலை செய்வதற்கு மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சிறார் தாங்கள் கேட்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் அவர்களின் பெற்றோர் அதற்கு அனுமதியளிக்க வேண்டுமென்றும் இம்மசோதா கூறுகிறது.
பெல்ஜியத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள இம்மசோதா, வருங்காலத்தில் மாற்றுத்திறனாளிகள், மன நோயாளிகள் போன்றோரிடமும் செயல்படுத்தப்படக்கூடும் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.
பெல்ஜியத்தில் 2012ம் ஆண்டில், 1432 கருணைக்கொலைகள் நடத்தப்பட்டன. இவ்வெண்ணிக்கை 2011ம் ஆண்டைவிட 25 விழுக்காடு அதிகம்.

ஆதாரம் : CWN








All the contents on this site are copyrighted ©.