2014-02-13 16:34:49

'போலியோ' நோயிலிருந்து இந்தியா முற்றிலும் விடுதலை பெற்றுள்ளது - உலக நலவாழ்வு நிறுவனம் (WHO)


பிப்.13,2014. உலக நோயாளிகளுக்குச் செபிக்கும் நாளென்று கத்தோலிக்கத் திருஅவை அறிவித்துள்ள பிப்ரவரி 11ம் தேதியன்று, இந்தியா, 'போலியோ' எனப்படும் முடக்குவாத நோயிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றதென்று உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.
கத்தோலிக்கத் திருஅவையும், ஏனைய கிறிஸ்தவ அமைப்புக்களும் இந்தியாவில் நலவாழ்வுப் பணிகளில் மேற்கொண்ட அயராத உழைப்பிற்குக் கிடைத்த தகுதியான வெகுமதி, இந்த அறிவிப்பு என்று CHAI எனப்படும் இந்திய கத்தோலிக்க நலக் கழகத்தின் தலைவர், அருள் பணியாளர், Tomi Thomas அவர்கள் கூறினார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தலைமையில், புது டில்லியில் பிப்ரவரி 11ம் தேதி நடைபெற்ற ஒரு விழாவில், உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை வெளியிடப்பட்டதாக, கத்தோலிக்கச் செய்திகள் கூறுகின்றன.
127 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டுள்ள இந்தியாவில், 2009ம் ஆண்டு, 741 பேர் 'போலியோ' நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும், கடந்த மூன்று ஆடுகளாக, புதிதாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர் எவரும் இல்லை என்றும் WHO அறிக்கை கூறுகிறது.
இந்நோய் இந்தியாவிலிருந்து ஒழிக்கப்பட்டாலும், இது மீண்டும் நம் நாட்டைத் தாக்காமல் இருப்பதற்கு, நாம் எப்போதும் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று CHAI தலைவர் அருள் பணியாளர் Thomas அவர்கள் கூறினார்.

ஆதாரம் : The Catholic Register








All the contents on this site are copyrighted ©.