2014-02-13 12:56:41

புனிதரும் மனிதரே : நன்மை செய்து துன்புறுவது மேல்(St. Zita)


சீத்தா என்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இத்தாலியச் சிறுமி, தனது 12 வது வயதில் லூக்கா நகரில் Fatinelli என்ற பண்ணையார் குடும்பத்தில் வீட்டுவேலைக்குச் சேர்ந்தார். அக்குடும்பத்தினராலும், உடன் பணியாளர்களாலும் பல ஆண்டுகள் அநியாயமாய் இழிவாக நடத்தப்பட்டார், புறக்கணிக்கப்பட்டார், சாட்டையால் அடிக்கப்பட்டார், இழிவான சொற்களால் வதைக்கப்பட்டார், அளவுக்கு அதிகமாக வேலை செய்யும்படியும் கட்டாயப்படுத்தப்பட்டார். இவர் கடுமையாக வேலை செய்ததும், அவரது நல்ல பண்புகளுமே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது. சீத்தா வேலை செய்த வீடு ஆலயத்துக்கு அருகில் இருந்ததால் அதிகாலையிலே கண்விழித்து திருப்பலிக்குச் சென்ற பின்னர் வேலைகளைத் தொடங்கினார். தனது வேலை முதலில் இறைவனுக்குப் பணி செய்வதாகும் என்று சொல்லி வந்தார் சீத்தா. இதனால் எவ்வளவு வேலைகள் கொடுத்தாலும் பொறுமையோடு செய்தார். பல ஆண்டுகள் கழித்து சீத்தாவின் நல்ல பண்புகளைக் கண்டுணர்ந்த Fatinelli வீட்டுத் தலைவர், சீத்தாவை மற்ற பணியாளர்களுக்குத் தலைவராக நியமித்தார். தலைவராக இருந்துகொண்டு வீட்டுவேலைகளைக் கவனித்தபோது அக்குடும்பத்தினராலும், உடன்வேலை செய்தவர்களாலும் முன்னர் அனுபவித்த துன்பங்களை மறந்தும்கூட சொல்லிக் காட்டியதே கிடையாது சீத்தா. பழிவாங்கும் எண்ணமும் இருந்ததே இல்லை. மாறாக அவர்களிடம் மிகுந்த கனிவுடன் நடந்து கொண்டார் சீத்தா. பணியாளர்களுக்குள் தீய ஒழுக்கங்கள், தீய செயல்கள் நடந்தால் மட்டுமே கண்டிப்பார் சீத்தா. ஏழைகளுக்குத் தர்மம் கொடுத்தார். சிலநேரங்களில் தன்னையே ஒறுத்து ஏழைகளுக்கு உதவினார். திருப்பலியிலும் திருநற்கருணையிலும் தனது வாழ்வுக்குத் தேவையான சக்தியைப் பெற்றார். எப்பொழுதும் அக அமைதியுடன் தாழ்மைப் பண்பில் சிறந்து, இறைப்பிரசன்னத்தில் வாழ்ந்த சீத்தா 1271ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி லூக்காவில் மரணமடைந்தார். லூக்கா நகர மக்களில் பலர் சீத்தாவை புனிதர் எனவே கருதினர். அவரது இறப்புக்குப் பின்னர் பல புதுமைகள் நடந்தன. 1580ம் ஆண்டில் புனித சீத்தாவின் கல்லறையைத் தோண்டியபோது அவரது உடல் அழியாமல் இருப்பதைக் கண்டனர். தற்போது அவரின் அழியாத உடல் லூக்கா நகரின் புனித Frediano ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்கத் திருஅவையில் அழியாமல் இருக்கும் புனிதர்களின் உடல்களில் புனித சீத்தாவின் உடலும் ஒன்று. புனித சீத்தா, வீட்டுவேலை செய்பவர்களின் பாதுகாவலர் எனவும், காணாமற்போன சாவிகளைக் கண்டுபிடிக்க உதவுபவர் எனவும் போற்றப்படுகிறார். புனித சீத்தாவின் விழாவாகிய ஏப்ரல் 27ம் தேதியன்று லூக்கா நகர மக்கள் சுட்ட ரொட்டிகளையும் மலர்களையும் ஆலயத்துக்கு எடுத்துச் செல்கின்றனர். 1212ம் ஆண்டில் இத்தாலியின் டஸ்கனி மாநிலத்தில் Monsagrati என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் புனித சீத்தா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.