திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இந்தியாவுக்கு வரும்படி சிறப்பான அழைப்பை விடுப்பேன்
- கர்தினால் Cleemis Thottunkal
பிப்.13,2014. தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நேரில் சந்திக்கும்போது, அவரை இந்தியாவுக்கு
வரும்படி சிறப்பான அழைப்பை விடுப்பேன் என்று இந்திய ஆயர் பேரவையின் புதியத் தலைவர் கர்தினால்
Mar Baselios Cleemis Thottunkal அவர்கள் கூறினார். சில நாட்களுக்கு முன், இந்திய
ஆயர் பேரவையின் புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கத்தோலிக்க சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை
திருஅவையின் தலைவர் கர்தினால் Thottunkal அவர்கள், ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த
பேட்டியொன்றில், தான் அடுத்த சில மாதங்கள் மேற்கொள்ளவிருக்கும் செயல் திட்டங்களை விளக்கினார். கத்தோலிக்கத்
திருஅவைக்கும், இந்திய நாட்டிற்கும் தகுந்த வழிகளில் பணியாற்ற உருவாக்கப்பட்டுள்ள இந்திய
ஆயர் பேரவையை அடுத்த சில ஆண்டுகள் வழிநடத்த தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பை
முழுமனதுடன் ஆற்றவிருப்பதாகக் கூறினார் கர்தினால் Thottunkal. கிறிஸ்தவ மறை துவக்கத்திலிருந்தே
இந்தியாவில் வேரூன்றியது என்பது நமக்குக் கிடைத்த ஓர் அரியக் கோடை என்று கூறிய கர்தினால்
Thottunkal அவர்கள், பன்முகக் கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமையை
வளர்ப்பது நம் தலையாயக் கடமை என்பதையும் தெளிவுபடுத்தினார். இந்தியாவில், வறுமையில்
சிக்குண்டிருப்போருக்கு சிறப்பானப் பணிகள் ஆற்ற கத்தோலிக்கத் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது
என்றும், வறியோரையும், மக்களையும் மனதில் கொண்டு, வருகிற தேர்தலில் மக்கள் வாக்களிக்க
திருஅவை தேவையான முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும் கர்தினால் Thottunkal அவர்கள் எடுத்துரைத்தார்.