2014-02-13 16:29:12

திருத்தந்தை பிரான்சிஸ் - கத்தோலிக்கக் கல்வி தரக்கூடிய ஒரு முக்கியமான கோடை, முழுமனித உருவாக்கம்


பிப்.13,2014. தொடர்ந்து மாறிவரும் இன்றையக் கலாச்சாரச் சூழலில், இளையோருக்குக் கத்தோலிக்கக் கல்வி அளிப்பது, திருஅவை சந்திக்கும் ஒரு முக்கியமான சவால் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
கத்தோலிக்கக் கல்வி பேராயத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கக் கல்வி குறித்து மூன்று எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
கத்தோலிக்கக் கல்வியில் இருக்கவேண்டிய உரையாடலின் மதிப்பு, தரம் வாய்ந்த கல்வியாளர்களை உருவாக்குதல், உலகிலிருந்து தன்னையே வேறுபடுத்தாத கல்வி நிறுவனங்கள் என்ற மூன்று எண்ணங்களில் தன் கருத்துக்களைப் பகிர்ந்தார் திருத்தந்தை.
கிறிஸ்தவர்கள், வேற்று மதத்தினர், மத நம்பிக்கையற்றவர் என்று பல பின்னணிகளிலிருந்து வரும் இளையோருக்கு கத்தோலிக்கக் கல்வி தரக்கூடிய ஒரு முக்கியமான கோடை, முழுமனித உருவாக்கம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.
இத்தகைய உருவாக்கத்தில் ஈடுபடும் கல்வியாளர்கள், தங்கள் பணியை ஓர் அன்புப் பணியாக, வாழ்வு தரும் பணியாக மேற்கொண்டு, தங்களிடம் உள்ள மிகச் சிறந்த திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
புதிய வழிகளில் நற்செய்தியைப் பரப்பும் எண்ணங்களை அண்மைக் காலங்களில் நாம் சிந்திக்கும்போது, கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள், புது வழிகளில் நற்செய்தியைப் பரப்புவதற்கு இன்னும் தீவிர அர்ப்பணத்துடன் உழைக்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, அத்தகைய அர்ப்பணத்தில் ஈடுபடுவோருக்கு தன் ஆசீரை வழங்குவதாகவும் கூறினார்.
பிப்ரவரி 12, இப்புதன் முதல், இவ்வெள்ளிக்கிழமை முடிய கத்தோலிக்க கல்வி பேராயத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டம் உரோம் நகரில் நடைபெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.