2014-02-13 16:31:42

திருத்தந்தை பிரான்சிஸ் - இவ்வுலகை இன்னும் நீதி நிறைந்த உலகமாக மாற்றும் முயற்சிகளில் கத்தோலிக்கர்களும், யூதர்களும் இணையவேண்டும்


பிப்.13,2014. கத்தோலிக்கர்களும், யூதர்களும் இறைவனிடம் கொண்டுள்ள உறவு நம்மிடையே வளரவேண்டிய உறவுக்கு அடிப்படை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அமெரிக்காவில் வாழும் யூதர் சமுதாயத்திலிருந்து தன்னைச் சந்திக்க வந்திருந்த 55 பிரதிநிதிகளை இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கத்தோலிக்க யூத சமுதாயங்களுக்கிடையே நிலவி வரும் உரையாடல் இன்னும் தீவிரமாகவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இரு மதத்தவருக்கும் இடையே உரையாடல்கள் வளர்வது மட்டுமல்ல, இவ்விரு சமுதாயத்தினரும் இவ்வுலகை இன்னும் நீதி நிறைந்த உலகமாக மாற்றும் முயற்சிகளிலும் இணைந்து ஈடுபடவேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
கிறிஸ்தவமல்லா மறைகளோடு திருஅவைக்குள்ள உறவு என்ற மையக்கருத்துடன், "நம் காலத்தில்" என்று பொருள்படும் Nostra Aetate என்ற இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு வெளியான 50ம் ஆண்டை அடுத்த ஆண்டு சிறப்பிக்க உள்ளோம் என்று கூறியத் திருத்தந்தை, கத்தோலிக்க மறையின் 'மூத்த உடன்பிறப்புக்களாகிய' யூதர்களோடு மேற்கொள்ளப்படும் உரையாடல் இன்னும் உறுதி பெறவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இன்னும் சில மாதங்களில் தான் புனித பூமியில் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தில், அனைவரும் செபத்தில் தன்னோடு ஒருங்கிணையுமாறு திருத்தந்தை தன் உரையின் இறுதியில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.