2014-02-12 14:51:33

பிப்.13,2014. புனிதரும் மனிதரே. - புறாவினால் திருத்தந்தையாக தேர்வானப் புனிதர்


236ம் ஆண்டு திருத்தந்தை அந்தெரோஸ் என்பவர் இறைபதம் சேர்ந்தார். அடுத்தத் திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் நேரம் வந்தது. தங்கள் கைகளை உயர்த்தியும், கைகளைத் தட்டியும் பெரும்பான்மையை நிரூபிப்பது அப்போது வழக்கமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் சித்ரவதைகளை அனுபவித்துவந்த அந்தக் காலத்தில், உரோம் நகரில் அடுத்தத் திருத்தந்தையை தேர்ந்தெடுக்க கிறிஸ்தவ விசுவாசிகள் கூடினர். அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஃபாபியன் என்ற வழிப்போக்கருக்கு, தானும் அந்தக் கோவிலுனுள் சென்று அங்கு நடப்பதைக் காணவும், புதிய திருத்தந்தை யார் என அறியவும் ஆவல் பிறந்தது. கூட்டத்திற்குள் சென்று ஓர் ஓரமாக நின்றார். அடுத்தத் திருத்தந்தை யார் என பெயர்கள் முன்மொழியப்பட்டபோது, கோவில் மாடத்திலிருந்த வெண்புறா ஒன்று திடீரென கோவிலுக்குள்ளேயே பறந்து, சிறிதுநேரம் வட்டமடித்து ஃபாபியன் என்ற அந்த வழிப்போக்கரின் தலையில் அமர்ந்தது. தூய ஆவி, புறா வடிவில் வந்து அவரைத் தேர்ந்ததாக உறுதியாக நம்பிய விசுவாசிகள், பெரும் ஆரவாரம்செய்து ஃபாபியனை திருத்தந்தையாகத் தேர்வுச் செய்தனர். புறா என்பது அமைதியின் வடிவம். அதுபோல், இவர் காலத்தில் மன்னர் பிலிப் திருஅவையோடு நட்பு கொண்டு சித்ரவதைகளைத் தடைசெய்தார். கிறிஸ்தவம் ஓரளவு அங்கீகாரத்தையும் பெற்றது. ஆனால் மன்னர் பிலிப் இறந்து, தேச்சியுஸ் என்பவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும், மீண்டும் கிறிஸ்தவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். திருத்தந்தை ஃபாபியனும் திருமறைக்காக மறைசாட்சியாக உயிரிழந்தார். இன்று திருஅவையில் புனிதராகப் போற்றப்படுகிறார் திருத்தந்தை ஃபாபியன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.