2014-02-12 16:29:10

திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ள 20,000 தம்பதியர், காதலர்கள் நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு


பிப்.12,2014. பிப்ரவரி 14, வருகிற வெள்ளிக்கிழமையன்று, காதலர்கள் நாள் என்று உலகெங்கும் கொண்டாடப்படும் Valentine நாளன்று, திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ள 20,000 தம்பதியரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து ஆசீர் அளிப்பார் என்று திருப்பீட குடும்ப அவைத் தலைவர் பேராயர் Vincenzo Paglia அவர்கள் கூறினார்.
அடுத்த சில மாதங்களில் தங்கள் திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் இத்தம்பதியர், 28 நாடுகளைச் சார்ந்தவர்கள் என்று கூறிய பேராயர் Paglia அவர்கள், பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும் இச்சந்திப்பு, வத்திக்கான் தொலைக்காட்சி வழியே நேரடி ஒளிபரப்பாகும் என்றும் அறிவித்தார்.
புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் 11 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வில், முதல் ஒரு மணி நேரம், பாடல்கள், செபங்கள், அன்பு பரிமாற்றம் நிகழ்ந்த சாட்சியங்கள் இடம்பெறும் என்றும், 12 மணிக்கு வளாகத்திற்கு வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் கேள்வி பதில் நேரம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான இளையோர் ஆர்வம் காட்டியுள்ளது மிகவும் நல்லதோர் அடையாளம் என்று கூறிய பேராயர் Paglia அவர்கள், திருமண உறவுகள் நிரந்தரம் அல்ல என்று இவ்வுலகம் கூறிவரும் கருத்துக்களுக்கு மாற்றுஅடையாளமாக, 20,000த்துக்கும் அதிகமான இளம் தம்பதியர், தங்கள் உறவு நிலைத்து நிற்கும் என்று உலகிற்கு வெளிப்படுத்த, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடிவருவது நம்பிக்கை தரும் நிகழ்ச்சி என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.