2014-02-12 14:40:20

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


பிப்.,12,2014. கடந்த சில வாரங்களாக மழை அவ்வப்போது பெய்துகொண்டிருக்க இவ்வாரம் புதன்கிழமைவரை இது தொடரும் என வானிலை அறிக்கைகள் தெரிவித்திருந்தன. ஆனால், புதன் காலையில் ஒரு சில நிமிடங்கள் இலேசாக தூறியதுடன், மழை நின்றுவிட, சூரியனும் தலையைக்காட்டத் துவங்கியது, திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகத்தில் பங்குபெற வந்தவர்களுக்கு கூடுதல் ஆசீராக இருந்தது. தூய பேதுரு பேராலய வளாகம் திருப்பயணிகளாலும் சுற்றுலாப்பயணிகளாலும் நிரம்பியிருக்க, அருளடையாளங்கள் குறித்த தன் மறைப்போதகத்தைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்துவ விசுவாசத்தை நம் இளமைகாலத்தில் நம்மில் தூண்டுவதற்கு உதவும் அருளடையாளங்கள் குறித்த மறைக்கல்விபோதனையில் இன்று, திருநற்கருணை குறித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவை என்ற முறையிலும் கிறிஸ்தவத் தனியாளர் என்ற வகையிலும் நம் தினசரி வாழ்வில் திருநற்கருணையை எவ்வாறு வாழ்வுமுறையாகக் கடைப்பிடிக்கிறோம் என்பது குறித்து இன்று உங்களுடன் இணைந்து சிந்திக்க ஆவல்கொள்கின்றேன். முதலில், நாம் பிறரை நோக்கும் வழிகளில் ஒரு நல்ல பாதிப்பைக் கொணர்கிறது திருநற்கருணை. தன் இவ்வுலக வாழ்வின்போது, இயேசு கிறிஸ்து மக்களோடு இணந்திருந்து அவர்களின் பேராவல்களையும் பிரச்சனைகளையும் பகிர்ந்துகொண்டதன் மூலம் தன் அன்பை வெளிப்படுத்தினார். இதைப்போன்று திருநற்கற்ருணை, நம்மையும், ஏழை பணக்காரர், இளைஞர் முதியவர், சுற்றத்தார் பார்வையாளர்கள் என அனைவருடனும் ஒன்றிணைத்துக் கொண்டுவருகிறது. இவர்கள் அனைவரையும் நம் சகோதர சகோதரிகளாக நோக்கி அவர்களில் இயேசுவின் முகத்தை உற்றுநோக்க திருநற்கருணை அழைப்புவிடுக்கிறது. இரண்டாவதாக, திருநற்கருணையில் நாம், கடவுளின் மன்னிப்பை அனுபவிப்பதோடு, பிறரை மன்னிப்பதற்கான அழைப்பையும் பெறுகிறோம். நாம் தகுதியுடையவர்கள் என்பதால் திருநற்கருணை திருப்பலியை நிறைவேற்றவில்லை, மாறாக, இயேசு கிறிஸ்துவில் மனுவுருப்பெற்ற இறைஇரக்கம் நமக்குத் தேவை என்பதை நாம் உணர்ந்ததால். பாவத்திலிருந்து நம்மை விடுவிக்க நமக்கு தன் உடல் மற்றும் இரத்தம் எனும் கொடையை இயேசு வழங்கியதை திருநற்கருணையில் நாம் புதுப்பிக்கிறோம். அதேவேளை இறை இரக்கத்தைப் பெறவும், இரக்கத்தைக்காட்டவும் நம் இதயங்கள் விரிவடைகின்றன. மூன்றாவதாக, திருப்பலிக்கொண்டாட்டங்களில், கிறிஸ்துவின் வாழ்வு மற்றும் வார்த்தை வழியாக நாம் கிறிஸ்தவ சமூகமாக ஊட்டம் பெறுகிறோம். திருநற்கருணையிலிருந்தே, திருஅவை தன் தனித்துவத்தையும் மறைப்பணியையும் தொடர்ந்து பெற்றுவருகிறது. இறைவார்த்தை வழிபாட்டில் இறைவனை நாம் வழிபடுவதோடு நம் வாழ்வு ஒத்திணங்கிச் செல்வதற்கு உதவும் நோக்கில், இந்தக் கொண்டாட்டங்களில் இயேசு கிறிஸ்து நம்மை, தம் அருளால் நிறைக்கிறார். இறைவன் தாம் வழங்கியுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்ற உறுதிப்பாட்டுடன் விசுவாசம் மற்றும் செப உணர்வுடன் திருநற்கருணையை வாழ்வோம்.
இந்த விண்ணப்பத்துடன் தன் புதன் மறைபோதகத்தை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.