2014-02-12 16:30:49

ஓராண்டுக்கு முன் தான் எடுத்த முடிவைக் குறித்து எவ்வித வருத்தமுமின்றி முன்னாள் திருத்தந்தை வாழ்கிறார் - மூத்த சகோதரர்


பிப்.12,2014. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்குக் கீழ் பல ஆண்டுகள் பணியாற்றியதும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் 7 மாத தலைமைப் பணி காலத்தில் அவருடன் பணியாற்றியதும் மன நிறைவு தரும் அனுபவம் என்று முன்னாள் திருப்பீடச் செயலரான கர்தினால் Tarcisio Bertone அவர்கள் கூறினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் தலைமைப் பணியைத் துறந்து ஓராண்டு காலம் நிறைவுறும் இவ்வேளையில், Tgcom24 என்ற இத்தாலியத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கர்தினால் Bertone அவர்கள் இவ்வாறு கூறினார்.
முன்னாள் திருத்தந்தையை தான் அவ்வப்போது சந்தித்து வருவதாகவும், தொலைபேசியில் தொடர்பு கொள்வதாகவும் கூறிய கர்தினால் Bertone அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இன்னும் மிகத் தெளிவானச் சிந்தனையோடும், நல்ல ஞாபகச் சக்தியோடும் உரையாடுவதைக் காண்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்று கூறினார்.
இதற்கிடையே, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மூத்த சகோதரர், அருள் பணியாளர் Georg Ratzinger அவர்கள், "La Razon" என்ற இஸ்பானிய நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஓராண்டுக்கு முன் தான் எடுத்த அந்த முடிவைக் குறித்து எவ்வித குழப்பமோ, வருத்தமோ இன்றி தன் சகோதரர் வாழ்வதாகக் கூறினார்.
தன் சகோதரர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும், தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொள்ளும் பலருக்கு பதில் சொல்வதிலும், அவருக்கு மிகப் பிடித்தமான பொழுதுபோக்கான ‘பியானோ’ வாசிப்பதிலும் அவர் மகிழ்வுடன் தன் நேரத்தைச் செலவிடுகிறார் என்றும் அருள் பணியாளர் Georg Ratzinger அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.