2014-02-12 16:41:30

ஈராக்கில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் - முதுபெரும் தந்தை Luis Sako


பிப்.12,2014. ஈராக் நாட்டில் நிரந்தர அமைதியை உருவாக்கும் ஒரு முயற்சியாக, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Raphael Luis Sako அவர்களுக்கும், இஸ்லாமிய மதத் தலைவர், Rafi Taha Al-Rifai அவர்களுக்கும் இடையே அண்மையில் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது.
ஒப்புரவு, உரையாடல், ஒருவரை மற்றவர் புரிந்து, ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட இரு மதத்தவரும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்ற கருத்து இக்கூட்டத்தில் பேசப்பட்டதென்று கல்தேய வழிபாட்டு முறை ஆயர் அலுவலகம் கூறியுள்ளது.
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒருவரை ஒருவர் மதிப்பதும், புதிய வழிகளில் தங்கள் மதக் கருத்துக்களை வெளியிடும் முயற்சிகளில் ஈடுபடுவதும், இவ்விரு குழுக்களும் இன்னும் நெருங்கி வருவதற்கு வாய்ப்பாக அமையும் என்று முதுபெரும் தந்தை, Sako அவர்கள் எடுத்துரைத்தார்.
அடிப்படை மதச் சுதந்திரத்துடன் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து வாழும் வழிகளைத் தேடவேண்டும் என்றும், அடிப்படைவாதக் கருத்துக்களை வளர்க்கும் வன்முறைகளைத் தவிர்க்கவேண்டும் என்றும் இஸ்லாமியத் தலைவர் Al-Rifai அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.