2014-02-12 16:42:25

அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளின் தூதரகங்களுக்கு Valentine வாழ்த்து அட்டைகள்


பிப்.12,2014. இலண்டன் மாநகரில் செயலாற்றும் பல்வேறு தூதரகங்களில், அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளின் தூதரகங்களுக்கு, இவ்வியாழனன்று Valentine வாழ்த்து அட்டைகளை வழங்க, கிறிஸ்தவ அமைதி ஆர்வலர்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது.
அன்பையும், காதலையும் அடிப்படையாகக் கொண்டு, பிப்ரவரி 14, வருகிற வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் Valentine நாளையொட்டியும், மனித சமுதாயத்தின் மீது அணு ஆயுதங்களின் தாக்கம் என்ற மையக் கருத்துடன், மெக்சிகோ நகரில், பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கையொட்டியும் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று கிறிஸ்தவ அமைதி ஆர்வலகள் அமைப்பு அறிவித்துள்ளது.
மெக்சிகோ, நார்வே, நியூசிலாந்து, ஆஸ்திரியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க முடியும் என்பதைக் கூறிவரும் நாடுகள் என்பதால், அந்நாடுகளுக்கு எங்கள் நன்றிகளைக் கூற அவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் வழங்குகிறோம் என்று கிறிஸ்தவ அமைதி ஆர்வலர்கள் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
சென்ற ஆண்டு நார்வே நாட்டில் Oslo நகரில் நடைபெற்ற கருத்தரங்கை, அணு ஆயுதங்கள் அதிகமுள்ள பல நாடுகள் புறக்கணித்தாலும், 127 நாடுகள் பங்கேற்றன என்றும், இவ்வாண்டு, மெக்சிகோவில் நடைபெறும் கருத்தரங்கில் 140 நாடுகள் பங்கேற்க உள்ளன என்றும் கிறிஸ்தவ அமைதி ஆர்வலர்கள் அமைப்பினர் கூறியுள்ளனர்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.