2014-02-11 15:27:49

முன்னாள் திருத்தந்தையின் பதவி விலகல் குறித்து அவரின் அந்தரங்கச் செயலர்


பிப்.11,2014. கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதியன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பதவி விலகலை அறிவித்தது, வருத்தம் மற்றும் நன்றியுணர்வை வழங்கிய ஒரு முக்கிய நாளாக இருந்தது என அறிவித்துள்ளார் முன்னாள் திருத்தந்தையின் அந்தரங்கச் செயலர் பேராயர் Georg Gänswein.
வத்திக்கான் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்முகத்தில் இதனைக் குறிப்பிட்ட பேராயர் Gänswein அவர்கள், அந்த காலக்கட்டத்தில் யாரும் எதிர்பார்த்திராத ஒரு துணிகர மற்றும் புரட்சி முடிவாக அது இருந்தது என்றார்.
திருஅவையை வழிநடத்தும் வலிமை தனக்கு தற்போது இல்லை என பதவி விலகி, தன்னைவிட வலிமையுடைய ஒருவருக்கு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வழியமைத்துக் கொடுத்தது, இறைவன் மீதும், திருஅவை மீதும் விசுவாசிகள் மீதும் அவர் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடேயாகும் எனவும் கூறினார் பேராயர் Gänswein.
தற்போதையத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையிலும் அகில உலகிலும் ஏற்படுத்திவரும் நல்மாற்றங்கள், முன்னாள் திருத்தந்தையின் பதவி விலகலிலிருந்து ஊக்கம்பெற்றவை என்பதையும் சுட்டிக்காட்டிய பேராயர் Gänswein அவர்கள், பதவி விலகல் என்ற எதிர்பாராத மாற்றம், ஏனைய மாற்றங்களுக்கும் வழியமைத்துக் கொடுத்துள்ளது என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.