2014-02-11 15:28:33

புனிதரும் மனிதரே - பேரொளி கண்ட பெர்னதெத்


பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் வாழ்ந்த பிரான்சிஸ், லூயீஸ் என்ற இளம் தம்பதியருக்குப் பிறந்த 9 குழந்தைகளில், ஐவர், குழந்தைப் பருவத்திலேயே, நோயுற்று இறந்தனர். முதலாவதாகப் பிறந்த பெர்னதெத் (Bernadette Soubirous), குழந்தைப் பருவத்தில், காலரா நோயினால் தாக்கப்பட்டார். பின்னர், தன் வாழ்நாள் முழுவதும் ஆஸ்துமா நோயினால் அவதியுற்றார்.
இவருக்கு 12 வயதானபோது, இவரது தந்தை பிரான்சிஸ், தன் வேலையை இழந்தார். வறுமைப் பிடியில் சிக்கிய இக்குடும்பம், பல்வேறு இடங்களில் அலைந்து, இறுதியில், உறவினர் ஒருவர் கொடுத்த ஒரு பாழடைந்த வீட்டில் குடியேறியது. அந்த வீடு, முன்னர் ஒரு சிறைச்சாலையாகப் பயன்படுத்தப்பட்டதால், காற்று வசதி ஏதுமின்றி இருந்தது. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி பெர்னதெத், இச்சூழலில் மிகவும் துன்புற்றார்.
1858ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, 14 வயதுநிறைந்த சிறுமி பெர்னதெத், தன் தங்கையோடும், மற்றொரு சிறுமியோடும், மசபியேல் (Massabielle) என்ற குகைக்கு அருகே, விறகுத் துண்டுகள் சேகரித்துக் கொண்டிருந்தார். பெர்னதெத்துடன் சென்ற இருவரும், அந்தக் குகை அருகே ஓடிய ஆற்றைக் கடந்து மறுகரைக்குச் சென்றனர். ஆற்றில் இறங்கினால், தன் ஆஸ்துமா அதிகமாகிவிடும் என்ற பயத்தினால், சிறுமி பெர்னதெத் ஆற்றைக் கடக்காமல், இக்கரையிலேயே தயங்கி நின்றார். அப்போது, திடீரென தென்றல் வீசுவதுபோன்ற ஒலி எழுந்தது. அந்தத் தென்றலில் வேறு எந்த மரமோ செடியோ அசையவில்லை. ஆயினும், மசபியேல் குகையில் முளைத்திருந்த ஒரு காட்டு ரோஜா செடி மட்டும் அசைந்தது. குகையிலிருந்து பேரொளி ஒன்று வெளிவந்தது.
லூர்து நகர் மசபியேல் குகையில், மரியன்னை, புனித பெர்னதெத் அவர்களுக்கு அளித்த முதல் காட்சி இது. இக்காட்சியைத் தொடர்ந்து, அடுத்த (1858ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதிக்கும், ஜூலை 16ம் தேதிக்கும் இடைப்பட்ட) 5 மாதக் காலத்தில், மரியன்னை, புனித பெர்னதெத்துக்கு 18 முறை காட்சி தந்தார். 16வது முறை தோன்றியபோது, "நானே அமல உற்பவம்" என்று மரியன்னை தன்னை அறிமுகம் செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.