2014-02-11 15:41:59

தேர்தல்களில் மிகுந்த கவனத்துடன் ஓட்டளிக்குமாறு தென்னாப்ரிக்க ஆயர்கள் வேண்டுகோள்


பிப்.11,2014. தென்னாப்ரிக்காவில் பொதுத் தேர்தல்கள் அண்மித்துவரும் வேளையில், எவ்வாறு ஓட்டளிக்க வேண்டுமென்பதில் கத்தோலிக்கர் மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள்.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் பிற ஊடகங்கள் வழியாக அரசியல்வாதிகள் கத்தோலிக்கரின் ஆதரவைக் கேட்டுவரும் இவ்வேளையில், அரசியல்வாதிகளின் பேச்சுக்களைக் கவனமுடன் கேட்டு தமது ஓட்டுக்களைக் கவனமுடன் அளிக்குமாறு கூறியுள்ளனர் ஆயர்கள்.

தென்னாப்ரிக்காவில் வருகிற மே மாதம் 7ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள், மனிதவாழ்வின் புனிதத்தையும், ஒவ்வொரு மனிதரின் மாண்பையும், திருமணம் மற்றும் குடும்ப வாழ்வையும் மதிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

உண்மையிலேயே மக்களை, குறிப்பாக ஏழைகளையும் சமுதாயத்தில் நலிந்தவர்களையும் மதித்து பொதுநலனுக்காக உழைக்கும் அரசியல்கட்சிகளை மக்கள் தேர்ந்தெடுக்குமாறும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கேட்டுள்ளனர்.

தேர்தல் முடிந்து அதன் வெற்றிகள் அறிவிக்கப்படும்வரை, கத்தோலிக்கர்கள் உருக்கமாகத் திருப்பலிகளிலும் பிற வழிபாடுகளிலும் செபிக்குமாறு கேட்டுள்ள ஆயர்கள், தேர்தல்களில் கத்தோலிக்கர் தங்கள் கடமைகளை நிறைவேற்றுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.


ஆதாரம் :Fides








All the contents on this site are copyrighted ©.